திருப்பூரில் அதிமுகவினர் பணம் பட்டுவாடா தேர்தல் பறக்கும் படையினரை கண்டித்து அமமுக வேட்பாளர் கணவருடன் தர்ணா

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வீடு, வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். 13வது வார்டுக்கு உட்பட்ட ஏ.பி.நகரில் ஒரு வீட்டில் அதிமுகவினர் வாக்காளர்களுக்கு ரூ.1000 வீதம் பணம் பட்டுவாடா செய்வதாக ரகசிய தகவல் வந்தது. இது குறித்து அந்த வார்டில் அமமுக சார்பில் போட்டியிடும் முத்துபாண்டியம்மாளின் கணவர் வேலு, பறக்கும் படை அதிகாரிகளுக்கு செல்போனில் தகவல் தெரிவித்தார். ஆனால் ஒரு மணி நேரத்திற்கு மேலாகியும் பறக்கும் படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வரவில்லை என தெரிகிறது. இதற்குள் பணம் பட்டுவாடாவை முடித்துக்கொண்டு அதிமுகவினர் அங்கிருந்து சென்றுவிட்டனர்.  இதனால் ஆத்திரமடைந்த வேலுவும், முத்துபாண்டியம்மாளும் ரோட்டில் அமர்ந்து சிறிது நேரம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இந்நிலையில், தாமதமாக சம்பவ இடத்திற்கு வந்த பறக்கும் படை அதிகாரிகள், அங்கிருந்த சில வீடுகளில் விசாரித்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர். இச்சம்பவத்தால் பரபரப்பு நிலவியது.

Related Stories: