தனியார் வேலையில் 75% இடஒதுக்கீடு அரியானா சட்டத்துக்கு அனுமதி: உயர் நீதிமன்ற தடையை நீக்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: அரியானா மாநிலத்தை சேர்ந்த மக்களுக்கு தனியார் துறை வேலைகளில் 75 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்துக்கு பஞ்சாப் - அரியானா உயர் நீதிமன்றம் விதித்த இடைக்கால தடையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

அரியானா மாநிலத்தில் தனியார் துறை வேலைகளில் 75 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை இம்மாநில அரசு கொண்டு வந்தது. இதற்கு தடை விதிக்கும்படி, மாநிலத்தில் உள்ள பல்வேறு அமைப்புகளை சேர்ந்த தொழில் நிறுவனங்கள், பஞ்சாப் - அரியானா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

இதை விசாரித்த நீதிமன்றம், அரியானா அரசின் சட்டத்துக்கு இடைக்கால தடை விதித்து கடந்த 3ம் தேதி உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அரியானா அரசு மேல்முறையீடு செய்தது. நீதிபதிநாகேஸ்வர ராவ் அமர்வில் நேற்று இந்த மனு விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த நீதிபதிகள், ‘அரியானா அரசு கொண்டு வந்துள்ள சட்டத்தை நிறுத்தி வைப்பதற்கு உயர் நீதிமன்றம் போதிய காரணங்களை தெரிவிக்காததால், உயர் நீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவு ரத்து  செய்யப்படுகிறது. அதே நேரம் முதலாளிகளுக்கு எதிராக கட்டாய நடவடிக்கையை அரியானா அரசு எடுக்கக் கூடாது,’ என்று உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தனர்.

Related Stories: