சென்னையில் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருள் விநியோகத்தை தடுக்க 90 குழுக்கள்..பாதுகாப்பு பணியில் 18,000 போலீசார்: ககன்தீப் சிங் பேடி பேட்டி

சென்னை: சென்னையில் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருள் விநியோகத்தை தடுக்க 90 குழுக்கள் அமைக்கப்பட்டிருப்பதாக மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியான ககன்தீப் சிங் பேடி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்களுக்கு பண விநியோகம் குறித்து புகார் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் 18004257012 அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு சுவர்கள், கட்டுமானங்களில் சுவரொட்டிகளை ஒட்டினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.

சென்னையில் இதுவரை 13,000 சுவர்களில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் அகற்றப்பட்டுள்ளன. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி சென்னையில் தேர்தல் பாதுகாப்பு, கண்காணிப்பு பணிகளில் 18,000 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்தல் நெருங்குவதையடுத்து இன்று இரவும், நாளையும் தவறுகள் நடக்க வாய்ப்புள்ளதால் பறக்கும் படை மூலம் தீவிர கண்காணிப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்று குறிப்பிட்டார். தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன.

இவற்றில் 12,838 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கான மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், வரும் 19-ம் தேதி ஒரே கட்டமாக நடக்கிறது. இந்த தேர்தலில் 2.50 கோடிக்கும் மேற்பட்டோர் வாக்களிக்க உள்ளார்கள். பிரச்சாரம் இன்றுடன் ஓய்வதால் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்கள். பொதுமக்கள் வாக்களிக்க வசதியாக தேர்தல் நடக்கும் பகுதிகளில் 19ம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: