வாக்காளர்களுக்கு வினியோகிக்க பதுக்கல்: சுயேச்சை வேட்பாளர் கடையில் 136 மூட்டை அரிசி பறிமுதல்; திருச்சியில் பறக்கும்படை அதிரடி

திருச்சி: திருச்சியில் வாக்காளர்களுக்கு வினியோகிப்பதற்காக சுயேச்சை வேட்பாளர் கடையில் பதுக்கி வைத்திருந்த 136 மூட்டை அரிசியை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் இன்று (17ம்தேதி) மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். முக்கிய பகுதிகளில் தீவிர வாகன சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருச்சி மாநகராட்சி 47வது வார்டில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் முகமது ஜியாவுதீனுக்கு சொந்தமான கடையில் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு தகவல் வந்தது.

இதையடுத்து தேர்தல் பறக்கும்படை அதிகாரி சபிதா ஆனந்த் தலைமையில் எஸ்எஸ்ஐ ரமேஷ் மற்றும் போலீசார் நேற்றுமுன்தினம் இரவு அங்கு சென்று சுயேச்சை வேட்பாளர் முகமது ஜியாவுதீனின் கடையில் அதிரடியாக சோதனையிட்டனர். அப்போது அங்கு மூட்டை, மூட்டையாக அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் தலா 10 கிலோ எடை கொண்ட 75 மூட்டை அரிசி, தலா 25 கிலோ எடைகொண்ட 61 மூட்டை அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட 136 அரிசி மூட்டைகளில் மொத்த மதிப்பு ரூ.1.25 லட்சம் ஆகும். சுயேச்சை வேட்பாளரின் கடையில் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி அரசியல் கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: