நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் சீனாவைச் சேர்ந்த 54 செயலிக்கு தடை: ஒன்றிய அரசு நடவடிக்கை

புதுடெல்லி: கடந்த 2020ம் ஆண்டு சீனாவின் பல்வேறு செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் 54 சீன செயலிகளுக்கு இந்தியாவில் நேற்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவும் சீனாவும் 3,400 கி.மீ. தொலைவு எல்லையை பகிர்ந்துகொண்டுள்ளன. எல்லை நிலைப்பாடு விவகாரம் தொடர்பாக இருநாடுகளுக்கும் இடையே அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வருகின்றது. இதற்கிடையே, கடந்த 2020ம் ஆண்டு ஜூன் 29ம் தேதி இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு மற்றும் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை விளைவிக்கும் என கருதப்பட்ட டிக்டாக், யூசி பிரவுசர், வி சாட் உள்ளிட்ட 59 சீன செயலிகளை ஒன்றிய அரசு தடை செய்தது. அதே ஆண்டு ஆகஸ்ட் 10ம் தேதி 47 செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

தொடர்ந்து செப்டம்பர் ஒன்றாம் தேதி 118 செயலிகளும், நவம்பர் 19ம் தேதி 43 செயலிகளையும் ஒன்றிய அரசு தடை செய்தது. இந்த செயலிகள் மூலமாக சேகரிப்படும் தரவுகள் தவறாக பயன்படுத்தப்பட்டு, பிற நாடுகளில் உள்ள சர்வர்களுக்கு அனுப்பப்படுவதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை விளைவிப்பதாக கருதப்படும் மேலும் 54 சீன செயலிகளுக்கு தடை விதிப்பதற்கு உள்துறை அமைச்சகம் பரிந்துரை செய்தது. இந்த 54 செயலிகளும் செல்போனில் இருந்து முக்கியமான அனுமதிகளை பெறுகின்றன மற்றும் பயனர்களின் முக்கிய தரவுகளை சேகரிக்கின்றன.

இவை தவறாக பயன்படுத்தப்பட்டு எதிரி நாடுகளில் உள்ள சர்வர்களுக்கு அனுப்பப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை தொடர்ந்து ஒன்றிய எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் இந்தியாவில் 54 சீன செயலிகளுக்கு இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்வீட் செல்பீ எச்டி, ப்யூட்டி கேமரா, மியூசிக் பிளேயர், மியூசிக் பிளஸ், வால்யூம் பூஸ்டர், வீடியோ பிளேயர்ஸ் மீடியா, விவோ வீடியோ எடிட்டர், ஆப்லாக் அண்ட் ஆஸ்ட்ராகிராப்ட் உள்ளிட்ட 54 சீனா செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: