ஹிஜாப் சர்ச்சையால் மூடல் கர்நாடகாவில் 1-10ம் வகுப்பு பள்ளிகள் இன்று திறப்பு: உடுப்பியில் 144 தடை உத்தரவு

உடுப்பி: கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரத்தால் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், 1-10ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் மட்டும் இன்று முதல் திறக்கப்படுகிறது. கர்நாடகாவில் ஹிஜாப், காவி உடை அணியும் பிரச்னை உடுப்பியில்தான் முதன் முதலில் வெடித்தது. இந்த போராட்டத்தின் தாக்கம் மாநிலம் முழுவதும் பரவியது. இதையடுத்து பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவித்து மாநில அரசு உத்தரவிட்டது. இப்பிரச்னை தொடர்பாக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை கடந்த வாரம் வியாழக் கிழமை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, இந்த வழக்கில் இறுதி தீர்ப்பு வரும் வரையில் மத அடையாளங்களை பிரதிபலிக்கும் உடைகளை அணிந்து பள்ளிக்கு வர மாணவர்களுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.

மேலும், திங்கட்கிழமை முதல் பள்ளிகளை திறக்கவும் உத்தரவிட்டது. இந்நிலையில், 1 முதல் 10ம் வகுப்புக்கு மட்டுமே பள்ளிகள் இன்று முதல் திறக்கப்படுகிறது. 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கும், கல்லூரிகளுக்கும் முன்னெச்சரிக்கையாக வரும் 15ம் தேதி முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. அசம்பாவிதங்களை தடுப்பதற்காக, உடுப்பி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு 19ம் தேதி வரை அமலில் இருக்கும். அதே நேரம், ஹிஜாப் அணிய அனுமதி அளிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை உயர் நீதிமன்றம் இன்று மீண்டும் விசாரிக்கிறது.

* சட்டப்பேரவை இன்று துவக்கம்

கர்நாடகாவில் 10 நாட்கள் நடக்க உள்ள சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்று முதல் தொடங்குகிறது. சட்டப்பேரவை, சட்டமேலவை அடங்கிய கூட்டுக் கூட்டத்தில் முதல் நாளான இன்று, ஆளுநர் தவார் சந்த் கெலாட் தனது முதல் உரையை ஆற்றுகிறார். மேகதாது அணை விவகாரம், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, ஹிஜாப் விவகாரத்தால் இந்த தொடரில் அமளிக்கு பஞ்சம் இருக்காது என்று கருதப்படுகிறது. 25ம் தேதி வரை இத்தொடர் நடக்க உள்ளது.

Related Stories: