தஞ்சையில் 3 வீடுகளில் என்ஐஏ திடீர் சோதனை; செல்போன், புத்தகங்கள் பறிமுதல்

தஞ்சை: கிலாபத் இயக்கத்தை சேர்ந்தவரும்,  தீவிரவாத அமைப்பான ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாக கருதப்பட்டவருமான அப்துல் காதர் என்பவர் கடந்த ஓராண்டுக்கு முன்பு  கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதேபோல் மன்னை பாபா பக்ருதீன் என்பவரும் இதே புகாரில்  4 மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் இந்த இயக்கத்தில் தொடர்புடையதாகக் கூறி தஞ்சை கீழவாசல் தைக்கால் தெருவை சேர்ந்த டூவீலர் மெக்கானிக் அப்துல் காதர் மற்றும் கோழி கறிக்கடை நடத்திவரும் முகமது யாசின், தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள காவேரி நகர் பகுதியை சேர்ந்த அகமது ஆகியோரது வீடுகளில் சோதனையிட தேசிய குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள்(என்ஐஏ) தலா 3 பேர் இன்று அதிகாலை 5 மணிக்கு 2 வாகனங்களில் வந்தனர்.

இதில் ஒரு குழுவினர்  5 மணிக்கு தஞ்சை கீழவாசல் தைக்கால் தெருவில் உள்ள அப்துல் காதர் வீட்டுக்கு வந்தனர். அங்கு 1 மணி ேநரம் சோதனை நடத்தினர். இதில் எதுவும் சிக்கவில்லை என கூறப்படுகிறது. பின்னர் 6 மணிக்கு அருகில் உள்ள முகமது யாசின் வீட்டுக்கு சென்று அங்குலம் அங்குலமாக சோதனையிட்டனர். இதையறிந்த அப்பகுதி ஆண்கள், பெண்கள் மற்றும் எஸ்டிபிஐ கட்சியினர் முகமது யாசின் வீட்டு முன் திரண்டு கண்டன கோஷமிட்டனர். இதையடுத்து என்ஐஏ அதிகாரிகள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். தஞ்சை போலீசார் அங்கு வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் சோதனை நடத்திய என்ஐஏ அதிகாரிகள் காலை 9.45 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டனர். அவர்கள் முகமது யாசினின் செல்போன் மற்றும் அவரது வீட்டிலிருந்த சில புத்தகங்களையும் எடுத்து சென்றனர். அதிகாரிகள் வாகனத்தில் ஏறும் வரை, அங்கு திரண்டிருந்த மக்கள் அதிகாரிகளை கண்டித்து கோஷமிட்டனர். இதேபோல் மற்றொரு என்ஐஏ குழு தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள காவேரி நகர் பகுதியை சேர்ந்த அகமது வீட்டில் சோதனையிட்டனர். அங்கு எதுவும் சிக்கவில்லை என தெரிகிறது.

Related Stories: