ஜோலார்பேட்டையில் மின்கம்பங்கள் அகற்றாததால் ₹299 கோடியில் வாணியம்பாடி- ஊத்தங்கரை தேசிய நெடுஞ்சாலை பணிகளில் பாதிப்பு-அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ஜோலார்பேட்டை :  ஜோலார்பேட்டை பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மின்கம்பங்கள் அகற்றப்படாமல் உள்ளதால் புதிய சாலை அமைக்கும் பணியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடி முதல் கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வரை தேசிய நெடுஞ்சாலை அமைக்க ₹299 கோடி நிதி ஒதுக்கி கடந்த 2020ம் ஆண்டு பணி துவங்கப்பட்டு, தமிழக தேசிய நெடுஞ்சாலையாக இருந்த சாலை, விரிவாக்கம் செய்ய நான்கு வழி சாலையாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.

வாணியம்பாடி முதல் பொன்னேரி வரை 80 சதவீத பணிகள் முடிந்த நிலையில், ஜோலார்பேட்டையில் உள்ள மேட்டுசக்கரகுப்பம் ஆஞ்சநேயர் கோயில் பகுதியிலிருந்து, திருப்பத்தூர் வரை உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகள் மற்றும் சாலையில் உள்ள மின் கம்பங்கள் அகற்றப்படாமல் உள்ளதால், தேசிய  சாலை விரிவாக்கம் செய்து தார் சாலை அமைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

இதனால் தேசிய நெடுஞ்சாலை துறையினர் ஆங்காங்கே மின்கம்பங்கள் அகற்றப்படாமல் உள்ள இடங்களை தவிர்த்து மற்ற பகுதியில் சாலையை விரிவாக்கம் செய்து தார் சாலை அமைத்து வருகின்றனர். மேலும் சாலையின் நடுவிலும், ஓரத்திலும் மின் கம்பங்கள் மற்றும் டிரான்ஸ்பார்மர்கள் உள்ளதால், மின்வாரியத் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு சாலையோரத்தில் சாலைகளிலும் உள்ள மின்கம்பங்களை அகற்றி சீர்செய்தால் சாலை அமைக்கும் பணி விரைந்து நடைபெறும்.

மேலும், மின்வாரியத் துறை அதிகாரிகள் மின் கம்பங்களை அகற்ற விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளாத நிலையில், சாலை அமைக்கும் பணி விரைந்து முடிக்க முடியாததால், வாகன ஓட்டிகள் சாலைகளை விரைந்து கடந்துசெல்ல முடியாமலும் வாகனங்கள் செல்லும்போது மண் தூசி வருவதால் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். இதன்காரணமாக அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது.

எனவே தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருவதால், அந்தந்த துறை அதிகாரிகள் சாலைப்பணி விரைந்து மேற்கொள்ள நடவடிக்கைகளை செயல்படுத்த வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: