கண்ணமங்கலம் அருகே நெற்பயிர் பாதிக்காமல் மின்கம்பம் நட்ட மின்வாரிய பணியாளர்கள்-விவசாயிகள் பாராட்டு

கண்ணமங்கலம் : கண்ணமங்கலம் அடுத்த கம்மம்பட்டு கிராமத்தில் நெற்பயிர்கள் பாதிக்காமல் மின்கம்பம் நட்ட மின்வாரிய பணியாளர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இலவச விவசாய மின் இணைப்பு வேண்டி தமிழக அரசிடம் விண்ணப்பித்த விவசாயிகளுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி 1லட்சம் புதிய மின் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி கண்ணமங்கலம் மின்வாரிய அலுவலகத்திற்கு உட்பட்ட  விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு வழங்குவதற்கான மின் கம்பங்கள் நடப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கண்ணமங்கலம் அருகே உள்ள கம்மம்பட்டு கிராமத்தில் உள்ள விவசாயி சீனிவாசன்(42) என்பவரது நிலத்தில் புதிய இணைப்பு வழங்க வேண்டியிருந்தது. ஆனால் அவரது நிலத்திற்கு பிரதான சாலையிலிருந்து செல்ல வழியில்லாமல் நெல் பயிரிடப்பட்டிருந்தது. வழக்கமாக டிராக்டரில் மின்கம்பங்களை எடுத்து சென்று குழியில் நேரடியாக இறக்கி நடுவது வழக்கம்.

இந்த வழியில் எடுத்து சென்றால் நெற்பயிற்கள் முற்றிலும் சேதமடையும் சூழல் நிலவியது. இதனை தொடர்ந்து பயிற்கள் சேதமடையாமல் மின்கம்பத்தை எடுத்து செல்ல, உதவி மின்பொறியாளர் சிலம்பரசன் தலைமையில் மின்வாரிய பணியாளர்கள் திட்டமிட்டனர்.

பின்னர் முழங்கால் அளவு  சேறும் சகதியுமான பாதையில் சுமார் 400மீட்டர் தூரம் 16 மின் பணியாளர்கள் மிகவும் சிரமத்துடன் மின்கம்பத்தை தோள்களில் சுமந்து சென்று நட்டனர்.

இதனை பார்த்த பொதுமக்களும், விவசாயிகளும் நெல் அறுவடைக்கு பின்னர் கூட  மின்கம்பம் நட்டு இருக்கலாம். ஆனால் சிரமம் பார்க்காமல் தங்கள் கடமையை சிறப்பாக செய்த உதவி மின்பொறியாளர் சிலம்பரசன் மற்றும் மின்பணியாளர்களுக்கு பாராட்டும் நன்றியும் தெரிவித்தனர்.

Related Stories: