நீட் தேர்வுக்கு விலக்கு பெறும் வரை ஓயமாட்டோம்: கரூர் பிரசாரத்தில் உதயநிதி பேச்சு

கரூர்: நீட் தேர்வுக்கு விலக்கு பெறும் வரை ஓயமாட்டோம் என்று கரூரில் இன்று நடந்த பிரசாரத்தில் உதயநிதி ஸ்டாலின் ேபசினார். கரூர் மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் 40 திமுக வேட்பாளர்கள், 7 கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மனோரா கார்னர் அருகே இன்று தேர்தல் பிரசாரம் நடந்தது. இதில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்த 8 மாதத்தில் எண்ணற்ற சாதனைகளை செய்துள்ளோம். வடமாநிலத்தில் ஒரு பத்திரிகையில், இந்தியாவின் நம்பர் 1 முதல்வர் மு.க.ஸ்டாலின் என குறிப்பிட்டிருந்தது.

அதற்கு நம் முதல்வர், ‘இந்தியாவிலேயே தமிழ்நாடு எப்போது நம்பர் 1 மாநிலமாக வருகிறதோ அதுதான் எனக்கு மகிழ்ச்சி’ என்றார். சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றிய மசோதாவை, 150 நாட்கள் கழித்து கவர்னர் திருப்பி அனுப்பியுள்ளார். நேற்று வரலாற்றில் முக்கியமான நாள். சிறப்பு சட்டமன்ற கூட்டம் கூட்டி, மீண்டும் நீட் தேர்வு விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. நீட் தேர்வு விவகாரத்தில், நான் ஒரு ரகசியம் வைத்திருப்பதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார். அந்த ரகசியத்தை நான் இப்போது உங்களிடம் சொல்கிறேன்.

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறும் வரை நாங்கள் ஓயமாட்டோம். இது தான் அந்த ரகசியம். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவின் சாதனைகளை எடுத்து கூறி வேட்பாளர்களையும் மகத்தான வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். உடன் அமைச்சர் செந்தில்பாலாஜி, எம்எல்ஏ சிவகாமசுந்தரி இருந்தனர். இதையடுத்து வேலாயுதம்பாளையத்தில் உதயநிதி பிரசாரம் மேற்கொண்டார்.

Related Stories: