பொங்கல் பண்டிகைக்குப் பிறகு புதுவை மதகடிப்பட்டு வாரச்சந்தையில் மாடுகள் விற்பனை களைகட்டியது-சண்டை சேவல்களையும் போட்டி போட்டு வாங்கிச்சென்றனர்

திருபுவனை : மதகடிப்பட்டு வாரச்சந்தையில் நேற்று மாடுகள் விற்பனை களைகட்டியது. மேலும் சண்டை சேவல்களையும் இளைஞர்கள் போட்டி போட்டு வாங்கிச்சென்றனர்.

புதுவை மாநிலத்தில் மதகடிப்பட்டு வாரச்சந்தை செவ்வாய்க்கிழமை தோறும் நடைபெறுவது வழக்கம். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படும் மாடுகள் இங்கு விற்பனை செய்யப்படும். ஒரு ஜோடி மாடுகள் ரூ.50 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது.

கொரோனா ஊரடங்கு காரணமாக பல வாரங்களாக சந்தை நடைபெறவில்லை. ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் சந்தை மீண்டும் களைகட்ட தொடங்கி உள்ளது. இங்கு மாடுகள் தவிர காய்கறிகள், பழங்கள், கீரை வகைகள், கத்தரி நாற்றுகள், மாட்டுக்கு தேவையான கயிறுகள், மணிகள், கருவாடு, தளவாட பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்ட பொருட்களும் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்நிலையில் நேற்று பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களின் மாடுகளை விற்பனை செய்வதற்காக மதகடிப்பட்டு வாரச்சந்தைக்கு வந்திருந்தனர். ஏராளமான வியாபாரிகளும் மாடுகளை வாங்க சந்தையில் குழுமியிருந்தனர்.நேற்று சந்தையில் மாடுகளின் விலை வீழ்ச்சி காரணமாக விவசாயிகள் வேதனை அடைந்தனர். ஒரு கன்றுக்குட்டி ரூ.7ஆயிரத்துக்கு மட்டுமே விற்பனை செய்யப்பட்டது. ஒரு ஜோடி காளை மாடுகள் அதிகபட்சம் ரூ.85 ஆயிரம் வரை விற்கப்பட்டன. மாடு கன்றுக்குட்டியுடன் 45 ஆயிரம் விலைபோனது. அதுமட்டுமின்றி கூடுதலாக இந்த வாரம் ஆடுகள் விற்பனையும் தொடங்கியுள்ளது. ஒரு ஆடு ரூ.8 ஆயிரம் வரை விலை போனது.

கோழிகளின் விற்பனையும் படுஜோராக நடைபெற்றது. குறிப்பாக சண்டை சேவல்களை இளைஞர்கள் போட்டி போட்டு வாங்கிச்சென்றனர். ஒரு சேவல் 1500 முதல் 2 ஆயிரம் வரை விலை போனது. மாடுகளை வாங்கிய வியாபாரிகள் வெளி ஊருக்கு எடுத்துச் செல்ல அவர்களுடைய வாகனங்கள் அணிவகுத்து காத்திருந்தன. வாரச்சந்தையில் கூட்டம் கூடியதால் டீக்கடை, டிபன்கடை, ஓட்டல்களிலும் வியாபாரம் களைகட்டியது.

Related Stories: