மேகதாதுவில் அணை கட்டும் விவகாரம்: டெல்லியில் உள்ள கர்நாடகா இல்லத்தில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை முக்கிய ஆலோசனை

புதுடெல்லி: மேகதாதுவில் அணை கட்டும் விவகாரத்தில் தமிழகம்- கர்நாடகா இடையே சுமூக முடிவு எட்டப்பட்டால் மட்டுமே சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்படும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ள நிலையில் கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அம்மாநில அமைச்சர்கள், அதிகாரிகள், வழக்கறிஞர்கள் உடன் இன்று காலை முக்கிய ஆலோசனை மேற்கொண்டார். காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. இந்த அணை கட்டப்பட்டால் பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்காமல் தமிழக விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்பதால் தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் மேகதாதுவில் அணைகட்ட எப்போது அனுமதி வழங்கப்படும் என மக்களவையில் கர்நாடகா எம்.பி. ஒருவர் நேற்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த ஒன்றிய அமைச்சர் அஸ்வினி குமார் சவ்பே தமிழக- கர்நாடக மாநிலங்களுக்கிடையே சுமூக முடிவு ஏற்பட்டால் மட்டுமே மேகதாது திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்படும் என தெரிவித்தார். மேலும், மேகதாது அணை கட்டப்பட்டால் மொத்தம் 4,996 ஹெக்டேர் நிலம் நீரில் மூழ்கும். சங்கமா, மடவாளா, பொம்மை சந்திரா உள்ளிட்ட கிராமங்களும் நீரில் மூழ்கும் என ஒன்றிய அமைச்சர் அஸ்வினி குமார் பதிலளித்துள்ளார். இந்நிலையில் 2 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அங்குள்ள கர்நாடக பவனில் இன்று காலை முக்கிய ஆலோசனை மேற்கொண்டார். இதில் கர்நாடகாவின் நீர்வளத்துறை அமைச்சர், சட்ட அமைச்சர், அதிகாரிகள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.         

Related Stories: