நீட் தேர்வில் இருந்து விலக்குக்கு தடையாக இருந்தால் ஆளுநர் மாளிகையை முற்றுகையிடுவோம்: மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ பேட்டி

சென்னை: நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவது மாநில அரசின் உரிமை என்றும், இதற்கு ஆளுநர், குடியரசுத் தலைவர் தடை விதிக்கக் கூடாது என்று மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ கூறியுள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ நேற்று அளித்த பேட்டி: அண்ணாமலை நீட் பற்றி பொய் பிரசாரம் செய்து வருகிறார். அண்ணாமலை மாணவி லாவண்யா தற்கொலை பற்றியும், நீட் விவரம் பற்றியும் பேசுவது எல்லாம் முற்றிலும் தவறானது. நீட் தேர்வில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டை கடந்த ஆட்சியின் போது, ஆளுநர் ஒப்புதல் அளிப்பதற்கு கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேல் எடுத்துக் கொண்டார்.

அதற்கு அப்போதைய எதிர்க்கட்சி தலைவர் தற்போதைய முதல்வர் ஸ்டாலின் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டார். அனைவருக்கும் எதிரானது நீட் இதை மறைக்க முடியாது. தமிழ்நாட்டை தவிர பாஜ ஆளுகின்ற எந்த மாநிலத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு இருக்கின்றதா?. காங்கிரஸ் கட்சி உச்ச நீதிமன்றத்தில் அழுத்தம் காரணமாக தான் மருத்துவ கல்லூரிக்கு நுழைவு தேர்வை நடத்தலாம் என முன்னெடுத்தது. ஆனால் பாஜ தான் நீட் தேர்வை அமல்படுத்தியது. நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவது பொது மக்களின் விருப்பம் மாநில அரசின் உரிமை. இதற்கு ஆளுநர், குடியரசுத் தலைவர் தடை விதிக்கக் கூடாது. ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்தில் தேவைப்பட்டால் என் தலைமையில் நடைபெறும் என்றார்.

Related Stories: