சூடுபிடிக்கும் உத்தரபிரதேச தேர்தல்; பகவான் கிருஷ்ணர் என் கனவில் வந்தார்: பிரசாரத்தில் அகிலேஷ் யாதவ் பேச்சு

மதுரா: பகவான் கிருஷ்ணர் என்னுடைய கனவில் வந்து, மதுராவை (பிருந்தாவனம்) மிகுந்த கவனத்துடன் பார்த்துக் கொள்ளுமாறு கூறியதாக மதுரா பிரசாரத்தில் அகிலேஷ் யாதவ் பேசினார். உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் பேசுகையில், ‘மாநிலத்தில் சமாஜ்வாதி அரசு அமைந்தவுடன் மதுரா நகரத்தை உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு நகரமாக மாற்றுவோம். ஏனென்றால் பகவான் கிருஷ்ணர் என்னுடைய கனவில் வந்து, சமாஜ்வாதி கட்சி ஆட்சியை பிடித்தவுடன் மதுராவை (பிருந்தாவனம்) மிகுந்த கவனத்துடன் பார்த்துக் கொள்ளுமாறு கூறினார்.

பாஜக தலைவர்களிடம் பொய்யைத் தவிர வேறு எதுவும் இல்லை. மதுரா, அயோத்தி, பிரயாக்ராஜ் ஆகிய இடங்களில் போட்டியிட யோகி ஆதித்ய நாத் போட்டியிட விரும்பினார். ஆனால், அவர் இங்கு போட்டியிட முடியாது. இதற்கு காரணம், இங்கு குரங்குகள், காளைகள் எண்ணிக்கை அதிக கோபத்துடன் இருக்கின்றன. இங்குள்ள குரங்குகளை விரட்டிவிட ஒப்பந்தப்புள்ளிகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் குரங்குகள் அவர்களின் கையில் சிக்கவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் பழைய ஓய்வூதியம் முறை அமல்படுத்தப்படும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கும் வகையில் வயது வரம்பில் தளர்வு கொடுக்கப்படும்.

விவசாயிகளுக்கு பாசன வசதிக்கான இலவச மின்சாரம் வழங்கப்படும். எங்களது கூட்டணி அரசு அமைந்தவுடன் வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டு வீரமரணம் அடைந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் வழங்கப்படும்’ என்றார். பகவான் கிருஷ்ணர் என்னுடைய கனவில் வந்து, மதுராவை (பிருந்தாவனம்) மிகுந்த கவனத்துடன் பார்த்துக்  கொள்ளுமாறு கூறியதாக அகிலேஷ் பேசியது, உத்தரபிரதேச அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Related Stories: