யு19 உலக கோப்பை பைனல்: ரவி, பாவா வேகத்தில் சரிந்தது இங்கிலாந்து

நார்த் சவுண்ட்: இந்திய அணியுடனான ஐசிசி யு19 உலக கோப்பை இறுதிப் போட்டியில், ரவி குமார், ராஜ் பாவாவின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய இங்கிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து திணறியது. சர் விவியன் ரிச்சர்ட்ஸ் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து யு19 அணி கேப்டன் டாம் பிரெஸ்ட் முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். ஜார்ஜ் தாமஸ், ஜேக்கப் பெத்தெல் இருவரும் இன்னிங்சை தொடங்கினர். ஜேக்கப் (2 ரன்), கேப்டன் பிரெஸ்ட் (0) இருவரையும் ரவிகுமார் அடுத்தடுத்து வெளியேற்ற, இங்கிலாந்து 3.3 ஓவரில் 18 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து தடுமாறியது. ஓரளவு தாக்குப்பிடித்த தாமஸ் 27 ரன் எடுத்து ராஜ் பாவா வேகத்தில் யஷ் துல் வசம் பிடிபட்டார்.

பாவாவின் அபார பந்துவீச்சில் வில்லியம் லக்ஸ்டன் (4), ஜார் பெல் (0), ரெஹான் அகமது (10 ரன்) ஆகியோர் விக்கெட்டை பறிகொடுக்க, இங்கிலாந்து 16.2 ஓவரில் 61 ரன்னுக்கு 6 விக்கெட் இழந்து சரிவை சந்தித்தது. அலெக்ஸ் ஹார்டன் 10 ரன்னில் பெவிலியன் திரும்பினார். இங்கிலாந்து 24.3 ஓவரில் 91 ரன்னுக்கு 7வது விக்கெட்டை இழந்த நிலையில், ஜேம்ஸ் கென்னத் ரியூ - ஜேம்ஸ் ஜான் சேல்ஸ் இணைந்து கடுமையாகப் போராடினர். நிலைத்து நின்று விளையாடிய இந்த ஜோடி, இங்கிலாந்து ஸ்கோர் கணிசமாக உயர உதவியது. சேல்ஸ் பொறுப்புடன் கம்பெனி கொடுக்க, கென்னத் அரை சதம் அடித்தார். அவர் 95 ரன் (116 பந்து, 12 பவுண்டரி) விளாசி ரவி குமார் வேகத்தில் கவுஷல் தாம்பே வசம் பிடிபட்டார்.

கென்னத் - சேல்ஸ் ஜோடி 8வது விக்கெட்டுக்கு 93 ரன் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. ஆஸ்பின்வால் (0), பாய்டன் (1) வந்த வேகத்தில் வெளியேற, இங்கிலாந்து 44.5 ஓவரில் 189 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. சேல்ஸ் 34 ரன்னுடன் (65 பந்து, 2 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய பந்துவீச்சில் பாவா 5, ரவி 4, தாம்பே 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 190 ரன் எடுத்தால் 5வது முறையாக சாம்பியனாகலாம் என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது.

Related Stories: