சென்னை ஐ.ஐ.டி.யில் நிலவும் சாதிய பாகுபாடு: பிற்படுத்தப்பட்டோர் ஆணைய குழுவை அமைத்து விசாரிக்க கோரி பிரதமருக்கும் உதவி பேராசிரியர் விபின் கடிதம்

சென்னை: சென்னை ஐ.ஐ.டி.யில் நிலவும் சாதிய பாகுபாடு குறித்து பிற்படுத்தப்பட்டோர் ஆணைய குழுவை அமைத்து விசாரிக்க கோரி பிரதமருக்கும், ஒன்றிய கல்வி அமைச்சருக்கும், தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கும் அங்கு பணி புரியும் உதவி பேராசிரியர் விபின் தனித்தனியாக கடிதம் எழுதியுள்ளார். ஓ.பி.சி. ஆணையத்திற்கு விபின் அனுப்பியுள்ள கடிதத்தில் ஏற்கெனவே கொடுத்த புகாரின் அடிப்படையில் பெயரளவில் மட்டுமே விசாரணை நடத்தப்பட்டதாகவும், தனது புகாரின் மீது 2வது முறையாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரியுள்ளார். புகார் அளித்ததற்காக தான் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டதாகவும், தன்னுடன் புகார் அளித்த மேலும் 5 பேராசிரியர்களையும் முந்தைய இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி மிரட்டியதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் சென்னை ஐஐடி-யில் பல ஆண்டுகளாக பேராசிரியர்கள் மற்றும் உதவி பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு நடந்திருப்பதாகவும், குறிப்பிட்ட ஒரு பிரிவை சேர்ந்தவர்கள் தொடர்ச்சியாக ஆக்கிரமித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.மாணவர் சேர்க்கையில், ஊழியர்கள் நியமனத்திலும் ஓ.பி.சி., எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவினர் தொடர்ந்து நசுக்கப்படுவதற்கான ஆதாரங்களை புகாருடன் இணைத்திருப்பதாகவும் விபின் கூறியுள்ளார். பிரதமருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் பல இடங்களில் புகார் தந்தும் இதுவரை முறையான விசாரணை நடத்தப்படாததால் ஒன்றிய அரசு தலையிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இல்லாவிட்டால், வரும் பிப்ரவரி 24 ஆம் தேதி முதல் சென்னை ஐஐடி வளாகத்தில் சத்தியாகிரகப்போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் உதவி பேராசிரியர் விபின் தெரிவித்துள்ளார்.  சென்னை ஐஐடி உயர்மட்ட குழுவில் மாநில அரசு சார்பில் உறுப்பினர் நியமிக்கப்படுவதால் இதில் மாநில அரசு தலையிட்டு உரிய விசாரணை நடத்தி, சமூக நீதியை காக்க வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விரைவில் கடிதம் எழுத இருப்பதாக விபின் தெரிவித்தார்.

Related Stories: