பொது இடங்களில் பார்களை நடத்த சட்டத்தில் இடமில்லை..டாஸ்மாக் பார்களை மூட வேண்டும்: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

சென்னை: தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் உள்ள டாஸ்மாக் பார்களை 6  மாதங்களில் மூட வேண்டும் என்று  சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு  பிறப்பித்துள்ளது.  தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை ஒட்டி பார்களை  நடத்துவதற்கான டெண்டர் அறிவிப்பை டாஸ்மாக் நிர்வாகம் கடந்த டிசம்பர் 14ம்  தேதி வௌியிட்டது.  இந்த டெண்டரை ரத்து செய்து மறு டெண்டர் அறிவிக்க கோரி  சென்னை உயர் நீதிமன்றத்தில், டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் சிலர் வழக்கு  தொடர்ந்தனர். அவர்கள் தாக்கல் செய்த மனுவில், டாஸ்மாக் கடைகளில்  வாடிக்கையாளர்கள் வாங்கி மது அருந்திவிட்டு பார்களில் விட்டு செல்லும் காலி  பாட்டில்களை சேகரித்து விற்பனை செய்ய பார்களுக்கு அனுமதி வழங்க வேண்டும்.  வெளிப்படையான டெண்டரை அமல்படுத்த வேண்டும் என்று கோரியிருந்தனர்.   இந்த  வழக்குகள் நீதிபதி சி.சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தது. பல மூத்த  வழக்கறிஞர்கள் மனுதாரர்கள் சார்பில் ஆஜராகி வாதிட்டனர். அரசு தரப்பில்  அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முக சுந்தரம் ஆஜராகி வாதிட்டார்.

நீண்ட வாதங்களுக்கு பிறகு நீதிபதி  சி.சரவணன் பிறப்பித்த உத்தரவு வருமாறு: கடந்த 1981ல் டாஸ்மாக் நிர்வாகம் ஓட்டல்கள்,  பார்களுக்கு மொத்த வியாபாரம் மட்டுமே செய்ய முடிவு செய்தது. அதன் பிறகு  1989 முதல் 2003வரை மற்ற மாநிலங்களில் உள்ளதை போல் தனியார் மதுக்கடைகளை  தொடங்கவும், பார்களை நடத்தவும் தமிழகத்தில் அனுமதி வழங்கும் நடைமுறை  தொடங்கப்பட்டது.  பொது இடத்தில் மதுபோதையில் சென்றால் அது தண்டனைக்குரிய  குற்றம் என்று தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. பார்களில்  மது அருந்திவிட்டு பொது இடங்களில் சென்றாலும் குற்றம்தான். மது  அருந்தியவர்களால் மற்றவர்களுக்கு தொந்தரவு ஏற்படும். தனியார் இடங்களில் மது  அருந்தியது கண்டுபிடிக்கப்பட்டால் 3 மாதங்கள் சிறை தண்டனை என்றும்  சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு மது விலக்கு சட்டம்  1937ம்  பிரிவு 4ஏ-யில் பொது இடங்களில் மது அருந்தக்கூடாது. வீட்டில் அருந்தலாம்  என்று  தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் தனியார்கள் பார்  நடத்துவதற்கு அனுமதி அளித்து 2002ல் விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது.  பொது இடங்களில் மது போதையுடன் செல்வதை ஊக்கப்படுத்தும் வகையில் பார்களுக்கு  அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அனுமதி வழங்க டாஸ்மாக் நிர்வாகத்திற்கு  எந்த அதிகாரமும் சட்ட விதிகளில் வழங்கப்படவில்லை.பார்களை நடத்தும்  லைசென்சை வழங்க மதுவிலக்கு ஆயத்தீர்வை ஆணையருக்கு மட்டுமே உரிமை உள்ளது. பார்களை நேரடியாகவோ, மறைமுகமாகவோ டாஸ்மாக் நிர்வாகம் நடத்த முடியாது.  மதுவிலக்கு சட்டத்தில் டாஸ்மாக் நிர்வாகத்திற்கு மது  வகைகளை மொத்தமாகவோ, சில்லறையாகவோ விற்பனை செய்ய மட்டுமே அனுமதி  தரப்பட்டுள்ள நிலையில் அந்த நிர்வாகம் பார்களுக்கு அனுமதி தர அதிகாரம்  இல்லை. பொது இடத்தில் பார்களை நடத்த சட்டத்தில் இடமில்லை.

கடந்த 2003ல் கொண்டுவரப்பட்ட தமிழ்நாடு சில்லறை மது விற்பனை  விதிகளால் தமிழகத்தில் காளான்களைப்போல் பார்கள் உருவாகிவிட்டன. சட்ட  விதிகளுக்கு முரணாக பார்களை நடத்த முடியாது. தமிழ்நாடு வெளிப்படையான டெண்டர்  சட்டத்தின்படி மனுதாரர்கள் அரசிடம் முறையிட்டு நிவாரணம் பெற வழி உள்ளது. எனவே, சட்ட விதிகளுக்கு முரணாக டாஸ்மாக் கடைகளுக்கு  அருகில் நடத்தப்படும் அனைத்து பார்களையும் 6 மாதங்களில் மூடுவதற்கு  டாஸ்மாக் நிர்வாகம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்த வழக்குகள்  தள்ளுபடி செய்யப்படுகின்றன.இவ்வாறு நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.2003ல் கொண்டு வரப்பட்ட தமிழ்நாடு சில்லறை மது விற்பனை  விதிகளால் தமிழகத்தில் காளான்களை போல் பார்கள் உருவாகிவிட்டன

Related Stories: