உபி.யில் பாஜ.வை வீழ்த்த மாயாவதியுடன் கூட்டணி: அகிலேஷ் யாதவ் அழைப்பு

லக்னோ: உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் பாஜ.வை வீழ்த்த, தனது தலைமையிலான கூட்டணியில் இணையும்படி பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதிக்கு சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் அழைப்பு விடுத்துள்ளார். உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் சமாஜ்வாடி கட்சியும், ஆர்எல்டி கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவும், ஆர்எல்டி தலைவர் ஜெயந்த் சவுத்ரியும் லக்னோவில் நேற்று அளித்த பேட்டியின்போது, ‘மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியால் சமாஜ்வாடி-ஆர்எல்டி கூட்டணி வெற்றி பாதிக்குமா?’ என நிருபர்கள் கேட்டனர். அதற்கு  அகிலேஷ் அளித்த பதிலில், ‘‘அம்பேத்கர் கொள்கையை பின்பற்றுகிறவர்களும், சமாஜ்வாடியினரும் ஒன்றுதான். அவர்கள் கூட்டணி சேர வேண்டும் என ஏற்கனவே பலமுறை வலியுறுத்தி உள்ளேன். நாட்டின் அரசியல் சட்டத்தையும், ஜனநாயகத்தையும் காப்பாற்ற அம்பேத்கர் ஆதரவாளர்களும், சமாஜ்வாடியினரும் உடனே இணைவது அவசியம்,’’ என்றார்.  

 

சமாஜ்வாடி கூட்டணியில் மாயாவதியை சேர்ப்பதற்கு அகிலேஷ் விடுத்திருக்கும் வெளிப்படையான அழைப்பாக இது பார்க்கப்படுகிறது. சமாஜ்வாடி கூட்டணியில் பகுஜன் சமாஜ் சேர்ந்தால் உபியில் மீண்டும் ஆட்சி அமைக்கும் பாஜ.வின் திட்டத்துக்கு மிக பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அகிலேஷின் இந்த அழைப்புக்கு மாயாவதி பதில் எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால், மாயாவதி கட்சியின் நடவடிக்கைகளை பாஜ தலைவர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.  

கடந்த 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலில் சமாஜ்வாடி-பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட்டணி அமைத்து, மொத்தமுள்ள 80 தொகுதிகளில் தலா 40 தொகுதிகளில் போட்டியிட்டன. இதில், பகுஜன் சமாஜ் 10 தொகுதிகளிலும், சமாஜ்வாடி 5 தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றன. இந்த தேர்தல் முடிவு வெளியான 2 வாரங்களுக்குள் கூட்டணியில் இருந்து மாயாவதி விலகினார்.

Related Stories: