மடிப்பாக்கம் திமுக வட்ட செயலாளர் கொலையில் குற்றவாளிகள் அடையாளம் தெரிந்தது: கூடுதல் கமிஷனர் தலைமையில் 10 தனிப்படை தேடுதல்

சென்னை: மடிப்பாக்கம் திமுக வட்டச் செயலாளர் கொலை வழக்கில் குற்றவாளிகளை கூடுதல் கமிஷனர் தலைமையிலான தனிப்படை போலீசார் அடையாளம் கண்டுபிடித்துள்ளனர். கொலையாளிகளை கைது செய்த பிறகு கூலிப்படையை ஏவியது யார் என்று தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னை மடிப்பாக்கம் பெரியார் நகர் 6வது தெருவை சேர்ந்தவர் செல்வம் (35), 188வது வார்டு திமுக வட்ட செயலாளர். சதாசிவம் நகரில் அலுவலகம் வைத்துள்ளார். சென்னை மாநகராட்சி தேர்தலில் திமுக சார்பாக அவரது மனைவி போட்டியிட மனு செய்ததாக கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் இரவு தேர்தல் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் பேசிக்கொண்டிருந்தார். இரவு 9 மணி அளவில் போன் வந்ததும் பேசியபடி அலுவலகத்தில் இருந்து வெளியே வந்துள்ளார். திடீரென 3 பைக்குகளில் வந்த 6 பேர் கும்பல்  செல்வத்திற்கு சால்வை அணிவிப்பது போல் பாவனை செய்து மறைத்து வைத்திருந்த பட்டா கத்தியால் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பினர். இதை தடுக்க முயன்ற தமிழரசன் என்பவருக்கு வலதுகையில் பலமாக வெட்டு விழுந்தது. ஆனால், செல்வத்துடன் இருந்தவர்கள் ஓடிவிட்டனர்.

தகவல் அறிந்ததும் கூடுதல் கமிஷனர் கண்ணன், இணை கமிஷனர் நரேந்திரன் நாயர், பரங்கிமலை போலீஸ் துணை கமிஷனர் பிரதீப், மடிப்பாக்கம் உதவி கமிஷனர் பிராங்க்  டி ரூபன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செல்வத்தின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் கூடுதல் கமிஷனர் கண்ணன் தலைமையில் 10 தனிப்படை அமைக்கப்பட்டது. இவர்கள் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் ஒருவர் சென்னை செம்பாக்கத்தில் ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார்.

அவருக்கும் செல்வத்துக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இதன் காரணமாக, செல்வத்தால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், தனக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்றும் போலீசில் புகார் செய்திருந்தார் அதிமுக பிரமுகர். மேலும், செல்வத்தின் நெருங்கிய நண்பர் ஒருவர், தற்போது அதிமுகவில் சேர்ந்துள்ளார். பின்னர் ரியல் எஸ்டேட் தொழிலில் இருவருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால், செல்வத்தின் நண்பர், தூத்துக்குடி அதிமுக பிரமுகருடன் இணைந்து செயல்பட்டு வந்துள்ளார்.

அதோடு செல்வத்துக்கும் ரவுடி சி.டி.மணிக்கும் நல்ல பழக்கம் இருந்துள்ளது. சி.டி.மணியின் எதிரி செந்தில், செல்வத்தின் மீது கோபத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ரியல் எஸ்டேட் மோதல் மற்றும் ரவுடிகளுக்குள் ஏற்பட்டுள்ள மோதலால் செல்வத்தை அவர்கள் கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், கொலையில் நேரடியாக ஈடுபட்டவர்கள் சென்னையைச் சேர்ந்த கூலிப்படையினர் என்பதை தனிப்படையினர் கண்டுபிடித்துள்ளனர். அவர்களை கைது செய்யும் பணியில் போலீசார் தீவிரமாக களம் இறங்கியுள்ளனர். இன்றைக்குள் அவர்கள் பிடிபடுவார்கள். அதன்பின்னர் அவர்களை ஏவியவர்களை நாங்கள் கைது செய்வோம் என்று உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: