தடுப்பூசி கட்டாயத்தை எதிர்த்து மக்கள் முற்றுகை: கனடா பிரதமர் ட்ரூடேவ் ரகசிய இடத்துக்கு ஓட்டம் குடும்பத்துடன் தலைமறைவு

ஒட்டாவா: கனடாவில் கொரோனா தடுப்பூசிக்கு எதிரான போராட்டம் வலுத்து வருவதால், அந்த நாட்டின் பிரதமர் ரகசிய இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். கனடா நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால்  அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.  நாட்டில் இருந்து எல்லை வெளிநாட்டுக்கு செல்லும் லாரி டிரைவர்கள் கண்டிப்பாக தடுப்பூசி செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதை எதிர்த்தும், கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்நாட்டு மக்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒட்டாவாவில் நாடாளுமன்றம் அமைந்துள்ள ‘பார்லிமென்ட் ஹில்’ பகுதியில்  10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டு முற்றுகையிட்டனர். இதில் பெண்கள், முதியவர்கள் மற்றும் சிறுவர்கள் உள்பட ஏராளமானோர் திரண்டு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேவுக்கும் அரசுக்கும் எதிராக கோஷங்களை எழுப்பினர். மேலும் சிலர் அருகில் தேசிய போர்நினைவிடத்தின் மீதும் ஏறி நின்று கொண்டு நடனம் ஆடி தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்தனர். இதில் கலவரம் ஏற்படலாம் என்று கருதி பாதுகாப்புக்காக ஏராளமான  போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.

 

போர் நினைவிடத்தில் ஏறி நின்று மக்கள் நடனம் ஆடியதற்கு கனடாவின் பாதுகாப்பு துறை அமைச்சர் அனிதா ஆனந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். இதனிடையே கொரோனா தடுப்பூசிக்கு எதிரான போராட்டம் வலுத்து வருவதையடுத்து பிரதமர் ட்ரூடோ, அவரது குடும்பத்தினர் ரகசிய இடத்துக்கு  அழைத்து செல்லப்பட்டு பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: