21வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்துடன் ரபேல் நடால் உலக சாதனை: ஆஸி. ஓபன் பைனலில் மெட்வதேவை வீழ்த்தினார்

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் ரஷ்யாவின் டானியல் மெட்வதேவை ஐந்தரை மணி நேரம் போராடி வென்ற ஸ்பெயின் நட்சத்திரம் ரபேல் நடால், 21வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றி உலக சாதனை படைத்தார்.

பரபரப்பான இறுதிப் போட்டியில் உலகின் 2ம் நிலை வீரர் மெட்வதேவுடன் (25 வயது) நேற்று மோதிய நடால் (35 வயது, 6வது ரேங்க்) 2-6 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்து பின்தங்கினார். இரண்டாவது செட்டில் அவர் கடுமையாகப் போராடியதால் ஆட்டம் டை பிரேக்கர் வரை இழுபறியாக நீடித்தது. அதில் சிறப்பாக விளையாடிய மெட்வதேவ் 7-6 (7-5) என்ற கணக்கில் வெற்றியை வசப்படுத்தி 2-0 என முன்னிலையை அதிகரித்துக் கொண்டார்.

மூன்றாவது செட்டிலும் அவர் 3-2 என முன்னிலை வகித்த நிலையில், சற்றும் மனம் தளராமல் உறுதியுடன் போராடிய நடால் 6-4, 6-4 என அடுத்த 2 செட்களையும் கைப்பற்றி பதிலடி கொடுக்க சமநிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, 5வது மற்றும் கடைசி செட் ஆட்டத்தில் அனல் பறந்தது. இரு வீரர்களும் மாறி மாறி புள்ளிகளைக் குவித்து முன்னேறியதால், பரபரப்பும் விறுவிறுப்பும் கூடிக்கொண்டே போனது. 5 மணி, 24 நிமிடத்துக்கு நீடித்த இந்த மாரத்தான் போராட்டத்தில், நடால் 2-6, 6-7 (5-7), 6-4, 6-4, 7-5 என்ற செட் கணக்கில் மெட்வதேவை வீழ்த்தி 2வது முறையாக ஆஸி. ஓபனில் கோப்பையை முத்தமிட்டார். ஏற்கனவே அவர் மெல்போர்னில் 2009ம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்றிருந்தார்.

பெடரர், ஜோகோவிச்சை முந்தினார்: கிராண்ட் ஸ்லாம் வேட்டையில் மும்மூர்த்திகளான பெடரர், நடால், ஜோகோவிச் தலா 20 பட்டங்களுடன் சமநிலையில் இருந்தனர். ஆஸி. ஓபனில் கோப்பையை கைப்பற்றினால், 21வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்துடன் நடால் முதலிடத்துக்கு முன்னேறும் வாய்ப்பு உருவானது. காயம் காரணமாக பெடரரும், கொரோனா தடுப்பூசி போடாததால் ஜோகோவிச் ஆஸ்திரேலியாவில் இருந்து கட்டாயமாக வெளியேற்றப்பட்டதாலும், நடாலின் உலக சாதனை வாய்ப்பு பிரகாசமானது.

காயம் காரணமாக 2021 சீசனின் கடைசி 7 மாதங்களில் ஒரே ஒரு தொடரில் மட்டுமே நடால் பங்கேற்றிருந்தார். கடந்த டிசம்பர் மாதம் கொரோனா தொற்று ஏற்பட்டு காய்ச்சல் மற்றும் உடல் சோர்வால் அவதிப்பட்டார். அதிலிருந்து மீண்டு, புத்தாண்டில் மீண்டும் களமிறங்கிய நடால் மெல்போர்ன் பார்க்கில் நடந்த ஏடிபி போட்டியில் பட்டம் வென்றது, அவரது தன்னம்பிக்கையை வெகுவாக அதிகரித்தது. ஆனாலும், இளம் வீரர்கள் மெட்வதேவ், சிட்சிபாஸ், ஸ்வெரவ், பெரட்டினி போன்றவர்கள் ஆஸி. ஓபனில் பட்டம் வெல்ல வரிந்துகட்டியதால், நடாலுக்கு வாய்ப்பு இல்லை என்றே அனைவரும் கணித்தனர்.

யாரும் எதிர்பாராத வகையில் சிறப்பாக விளையாடி இறுதிப் போட்டிக்கு முன்னேறியவர், மாரத்தான் போராட்டத்தில் மெட்வதேவை வீழ்த்தி தனது 21வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்று பெடரர் மற்றும் ஜோகோவிச்சை முந்தியுள்ளார். டென்னிஸ் வரலாற்றில் மகத்தான சாதனை படைத்துள்ள நடாலுக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.

Related Stories: