பிப்.3ல் ராகுல் அடிக்கல் நாட்டுகிறார் சட்டீஸ்கரில் ‘அமர் ஜவான் ஜோதி’

ராய்ப்பூர்: சட்டீஸ்கர் அரசு சார்பில் அமைக்கப்பட உள்ள ‘அமர் ஜவான் ஜோதி’க்கான அடிக்கல் நாட்டுவிழா பிப். 3ம் தேதி நடக்கிறது. இதில் ராகுல் காந்தி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுகிறார். போரில் வீரமரணமடைந்த ராணுவ வீரர்களின் நினைவாக ,டெல்லி இந்தியா கேட் பகுதியில் ‘அமர்ஜவான் ஜோதி’ என்ற நினைவு ஜோதி கட்டப்பட்டது. 50 ஆண்டுகளாக தீ விளக்கு எரிந்து கொண்டிருந்த அமர்ஜவான் ஜோதி கடந்த 21ம் தேதி போர் நினைவிடத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது. ஒன்றிய அரசின் இந்த முடிவுக்கு  காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.

இந்நிலையில், சட்டீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் நேற்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘போரில் வீரமரணமடைந்த இந்திய வீரர்களின் தியாக வரலாறுகள் பல தலைமுறைகளுக்கு உத்வேகம் அளித்து வருகிறது. நாட்டுக்காக போரிடாத நபர்களுக்கு  இது பற்றி எதுவும் தெரியாது. எனவே, ராணுவ வீரர்களின் தியாகங்களை போற்றும் வகையில் சட்டீஸ்கரில் அமர் ஜவான் ஜோதி அமைக்கப்பட உள்ளது. வரும் பிப்ரவரி 3ம் தேதி, ராகுல் காந்தி இதற்கான  அடிக்கல்லை  நாட்டுவார்’, என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக சட்டீஸ்கர் செல்லும் ராகுல் காந்தி, அங்கு நிலமற்ற கிராமப்புற ஏழை தொழிலாளர்களுக்கு  நிதி உதவி வழங்கும்  திட்டத்தையும் தொடங்கி வைக்கிறார். இதன் மூலம்  4.5 லட்சம் ஏழை தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும். இதற்காக மாநில அரசு பட்ஜெட்டில் ரூ.200 கோடி ஒதுக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

* அவதூறு வழக்கு: தினசரி விசாரணை

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கடந்த 2014ம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தின் பிவண்டி நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில், மகாத்மா காந்தியை கொலை செய்ததன் பின்னணியில் ஆர்எஸ்எஸ் உள்ளதாக குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக, ஆர்எஸ்எஸ் நிர்வாகி ராஜேஷ் குந்தே என்பவர் பிவண்டி மாஜிஸ்திரேட் முதல் வகுப்பு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்குக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் பிப்ரவரி 5ம்  தேதி முதல்  தினமும் வழக்கு விசாரணை நடத்தப்படும் என பிவண்டி மாஜிஸ்திரேட் பாலிவால் நேற்று உத்தரவிட்டார்.

Related Stories: