ஆம்ஆத்மி எம்எல்ஏக்களுக்கு தலா ₹25 கோடி லஞ்ச பேர விவகாரம்; டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அமைச்சர் மீது அவதூறு வழக்கு: பாஜக நிர்வாகி அளித்த புகாரில் கோர்ட் உத்தரவு

புதுடெல்லி: ஆம்ஆத்மி எம்எல்ஏக்களுக்கு தலா ₹25 கோடி லஞ்ச பேர விவகாரத்தில் டெல்லி முதல்வர், அமைச்சர் மீது அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லி பாஜக ஊடக பிரிவு தலைவர் பிரவீன் சங்கர் கபூர், டெல்லி கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அமைச்சர் அதிஷி ஆகியோர் பாஜக தலைவர்களுக்கு எதிராக அவதூறு கருத்துகளை தெரிவித்துள்ளனர். இதனால் பாஜக மற்றும் அதன் தொண்டர்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவர்களது கருத்துகள் உள்ளன.

டெல்லி முதல்வர், அமைச்சர் பதவியில் இருந்து கொண்டு பாஜகவுக்கு எதிராக அவதூறு கருத்துகளை தெரிவித்துள்ளதால், இருவருக்கும் எதிராக அவதூறு வழக்கு பதிந்து விசாரிக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட மாஜிஸ்திரேட், வழக்கின் விசாரணையை மே 4ம் தேதிக்கு ஒத்திவைத்தார். அன்றைய தினம் சாட்சி விசாரணை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

முன்னதாக கடந்த சில வாரங்களுக்கு முன் அமைச்சர் அதிஷி அளித்த பேட்டியில், ‘என்னையும் ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களான சவுரப் பரத்வாஜ், துர்கேஷ் பதக் மற்றும் ராகவ் சாதா ஆகியோரை கைது செய்ய அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளது. நாங்கள் பாஜகவில் சேராவிட்டால், எங்களை கைது செய்வதாக மிரட்டினர்’ என்று தெரிவித்தார். அதற்கு முன்னதாக கடந்த ஜனவரி மாதம் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்ட பதிவில், ‘ஆம்ஆத்மி கட்சியை சேர்ந்த ஏழு எம்எல்ஏக்களை பாஜக தலைவர்கள் தொடர்பு கொண்டு, ‘கெஜ்ரிவால் இன்னும் சில நாட்களில் கைது செய்யப்படுவார். ஆம்ஆத்மி எம்எல்ஏக்கள் 21 பேரிடம் பேசிவருகிறோம்.

அவர்களை சரிகட்டிய பின்னர், டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியை கவிழ்ப்போம். இதற்காக உங்களுக்கு தலா 25 கோடி ரூபாய் கொடுப்போம். மேலும் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட வாய்ப்பு கொடுப்போம்’ என்று கூறியுள்ளனர். அவர்கள் 21 எம்எல்ஏக்களிடம் தொடர்பு கொண்டதாக கூறினாலும், எங்களுக்கு கிடைத்த தகவலின்படி, இதுவரை 7 எம்எல்ஏக்களிடம் பேசியுள்ளனர்’ என்று பதிவிட்டார். இந்த பதிவு வெளியிட்ட சில வாரங்களில் டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு, தற்போது நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post ஆம்ஆத்மி எம்எல்ஏக்களுக்கு தலா ₹25 கோடி லஞ்ச பேர விவகாரம்; டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அமைச்சர் மீது அவதூறு வழக்கு: பாஜக நிர்வாகி அளித்த புகாரில் கோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: