பொள்ளாச்சி அருகே தங்க முலாம் பூசிய இரும்பு கட்டியை கொடுத்து ரூ.5 லட்சத்தை பறித்த கும்பல் கைது

கோவை: பொள்ளாச்சி அருகே குறைந்த விலைக்கு தங்க கட்டி தருவதாக ஆசைவார்த்தை காட்டி தங்க முலாம் பூசிய இரும்பு ராடை கொடுத்து 5 லட்சம் ரூபாய் மோசடி செய்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். கோவை முதலிபாளையத்தை சேர்ந்த ஷேக்அலாவுதீன் அவரது மனைவி நெஸிலா ஆகியோரே ஏமாற்றப்பட்டவர்கள். கடந்த 20ஆம் தேதி அலாவுதீனை தொலைபேசியில் தொடர்பு கொண்ட சிலர் தங்களிடம் 2 கிலோ எடை கொண்ட தங்க கட்டிகள் இருப்பதாகவும் அவற்றை 5 லட்சம் ரூபாய்க்கு தருவதாகவும் ஆசைகாட்டியுள்ளனர். அதன்படி மனைவி நெஸிலாவுடன் கிணத்துக்கடவு புதிய பேருந்து நிலையம் சென்ற அலாவுதீனிடம் 5 லட்சம் ரூபாயை பெற்றுக்கொண்டு 2 கிலோ தங்க கட்டியை மர்ம நபர்கள் கொடுத்துள்ளனர்.

சுமார் 80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க கட்டிகள் வெறும் 5 லட்சம் ரூபாய்க்கு கிடைத்த மகிழ்ச்சியில் கோவை திரும்பிய தம்பதி நேற்று தங்க கட்டியை எடுத்து உரசி பார்த்துள்ளனர். அப்போது இரும்பு உள்ளிட்ட உலோக பொருட்கள் மீது தங்க முலாம் பூசி ஏமாற்றி இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். அதுகுறித்து கிணத்துக்கடவு காவல்நிலையில் புகார் அளித்தனர். தனிப்படை அமைத்து விசாரணை நடத்திய போலீசார் தங்கக்கட்டி மோசடியில் ஈடுபட்ட சின்னபாபா, உசேன்அலி, கிருஷ்ணமூர்த்தி ஆகிய மூவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து 5 லட்சம் ரூபாயையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த கும்பல் வேறெங்கெல்லாம் கைவரிசை காட்டினர் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக கிணத்துக்கடவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Stories: