முத்துப்பேட்டை அருகே நாய் கடித்து இறந்த பாச குரங்கிற்கு இறுதிச் சடங்கு-கோயில் கட்டவும் கிராம மக்கள் முடிவு

முத்துப்பேட்டை : முத்துப்பேட்டை அடுத்த தம்பிக்கோட்டை கீழக்காடு எம்கே நகர் பகுதியில் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக குரங்கு ஒன்று சுற்றித்திரிந்தது. இந்த குரங்கு ஆரம்பத்தில் எல்லோரிடம் நன்றாக பழகி வந்தாலும் இடையில் பல்வேறு இடையூறுகளை கொடுத்தது. பின்னர் கிராம மக்களால் வனத்துறை அதிகாரிகள் மூலம் இந்த குரங்கை பிடித்து சென்று நீண்ட தூரத்திற்கு கொண்டுவிட்டாலும் மீண்டும் வந்து பழையபடி பாசத்துடன் உலாவி வந்தது. பின்னர் குடியிருப்புவாசிகளும் அதற்கு தேவையான உணவுகளை வழங்கி வந்ததால் இந்த குரங்கு கிராமத்தின் செல்ல குரங்காக மாறியது. இந்நிலையில் குரங்குக்கு வயது முதிர்வு ஏற்பட்டு, சோர்வுடன் திரிந்து வந்தது.

இந்நிலையில் கடந்த 5 தினங்களுக்கு முன்பு அப்பகுதியில் சுற்றித்திரிந்த நாய்கள் கூட்டம் இந்த குரங்கை கடித்து குதறியது. இதனால் உடலில் காயம் ஏற்பட்டு தரைக்கு வராமல் மரங்களிலும் வீடுகளின் மேலேயே தங்கி வந்தது. இந்நிலையில் இந்த பாச குரங்கு கடந்த 25ம் தேதி இறந்தது. இதனால் கிராம மக்கள் அதிர்ச்சியையும் பெரும் சோகத்தையும் அடைந்தனர். மேலும் வீட்டில் ஒருவர் இறந்தது போன்று அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் துக்கம் அனுசரித்தனர். இதையடுத்து சிறப்பு வாய்ந்த சிவாச்சாரியார்கள் வரவழைத்து குரங்கிற்கு இறுதி சடங்குகள் செய்து முறையாக நல்லடக்கம் செய்த அப்பகுதியினர் அந்த அடக்கஸ்தலத்தில் இதற்கு கோயில் கட்டவும் தீர்மானித்துள்ளனர். மேலும் அதற்கான பூஜைகளையும் செய்தனர்.

Related Stories: