கடலூர் அருகே பாழடைந்த குடியிருப்பு வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 2 மாணவர்கள் பலி; ஒருவர் படுகாயம்: குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி

கடலூர்: . கடலூர் அருகே கிழக்கு ராமாபுரம் வண்டிக்குப்பம் பகுதியில் சமத்துவபுரம் உள்ளது. இதன் பின்பகுதியில் இலங்கை அகதிகள் மற்றும் திருநங்கைகளுக்காக தனியார் தொண்டு நிறுவனத்தால் கடந்த 2013ல் கட்டப்பட்ட 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இதை யாரும் உபயோகப்படுத்தாததால் பாழடைந்த நிலையில் இருந்தன. இந்நிலையில் கடலூர் அருகே கிழக்கு ராமாபுரம் வண்டிக்குப்பம் பகுதியை சேர்ந்த பிளஸ் 2 மாணவர்களான தெய்வசிகாமணி மகன் வீரசேகர் (17), தணிகாசலம் மகன் புவனேஸ்வரன் (17), எஸ்.புதூர் பகுதியை சேர்ந்த மாணிக்கவேல் மகன் சுதீஷ்குமார் (17) ஆகியோர் நேற்று இந்த பாழடைந்த குடியிருப்பு அருகே விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது ஒரு வீட்டின் சுவர் திடீரென இடிந்து இவர்கள் 3 பேர் மீதும் விழுந்தது. அவர்களின் அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து இடிபாடுகளில் சிக்கிய 3 பேரையும் மீட்க முயன்றனர். தகவல் அறிந்து கடலூர் தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசாரும் சென்று பொக்லைன் இயந்திரத்தின் மூலம் இடிபாடுகளை அகற்றி 3 பேரையும் மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி வீரசேகர், சுதீஷ்குமார் ஆகியோர் உயிரிழந்தனர். இது குறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ரூ. 2 லட்சம் நிதியுதவி: பலியான மாணவர்கள் வீரசேகர், சுதீஷ்குமார் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சமும், படுகாயமடைந்த மாணவர் புவனேஸ்வரன் குடும்பத்துக்கு ரூ.50 ஆயிரமும் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

* குடியிருப்பு முழுவதையும் இடிக்க வலியுறுத்தல்

2013ல் இந்த குடியிருப்பு தரமற்ற முறையில் கட்டப்பட்டதாலும், அடிப்படை வசதிகள் சரிவர இல்லாததாலும் இலங்கை அகதிகள் மற்றும் திருநங்கைகள் அங்கு குடியிருக்க மறுத்துவிட்டனர். கடந்த 9 ஆண்டுகளாக யாரும் உபயோகப்படுத்தாமல் இருந்ததாலும் கடந்த பருவமழையின் போது கடலூர் மாவட்டத்தில் பலத்த மழையால் குடியிருப்புகளின் சுவர்கள் பலவீனமடைந்துள்ளது. இதை அறியாத மாணவர்கள் அந்த பகுதியில் விளையாடி கொண்டிருந்தபோது, சுவர் இடிந்து பலியாகி உள்ளனர். மீண்டும் இதுபோன்று நிகழாமல் தடுக்க பாழடைந்த நிலையில் உள்ள அந்த குடியிருப்புகள் முழுவதையும் இடித்து அகற்ற சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: