இரவு, ஞாயிறு ஊரடங்கு ரத்து; பிப்ரவரி 1ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் திறப்பு; தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில், கொரோனா நோய்த்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் அரசாணை எண்.25 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நாள் 07-01-2022-ன்படி, பல்வேறு கட்டுப்பாடுகளுடன் வார நாட்களில் இரவு 10.00 மணி முதல் காலை 5.00 மணி வரை இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் நடைமுறையில் இருந்து வருகிறது. ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகத்தின் அறிவிக்கை எண்.40-3/2020/DM-I(A), நாள் 27.12.2021-ல் கொரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்தத் தேவையான கட்டுப்பாடுகள் விதிக்கவும் மற்றும் அவசியம் ஏற்படின் குற்றவியல் நடைமுறைச் சட்டம், 1973, பிரிவு 144-ன் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளவும் மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில், கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் 27-1-2022 அன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  இதில், மாண்புமிகு மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அரசு மேற்கொண்ட சீரிய நடவடிக்கையினால் கொரோனா நோய்த் தொற்று பரவல் தற்போது குறைந்துள்ளதாகவும், போதுமான மருத்துவ கட்டமைப்புகள் தயார் நிலையில் இருப்பினும் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள உள்நோயாளிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளதாக சுகாதாரத் துறையால் தெரிவிக்கப்பட்டது.

மேலும், மாநிலத்தின் வேலைவாய்ப்பு, பொருளாதாரம், மாணவ – மாணவியர்களின் எதிர்காலம் மற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கை மீள திரும்புவதற்கு ஏதுவாக, பின்வரும் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன. தற்போது நோய்த் தொற்று பரவல் குறைந்திருப்பினும் பொது மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு நோய்த் தொற்று பரவலை கட்டுக்குள் வைத்திட கீழ்கண்ட கட்டுப்பாடுகள் மட்டும் வரும் 1-2-2022 முதல் 15-2-2022 வரை நடைமுறைப்படுத்தப்படும்.

1. சமுதாய, கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்கள் போன்ற பொது மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தடை தொடரும்.

2. நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையத்தினால் வெளியிடப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்ற வேண்டும்.

3. மழலையர் விளையாட்டு பள்ளிகள் (Play Schools), நர்சரி பள்ளிகள் (LKG, UKG) செயல்பட அனுமதி இல்லை.

4. பொருட்காட்சிகள் நடத்த அனுமதி இல்லை.

5. அரசு மற்றும் தனியாரால் நடத்தப்படும் அனைத்து கலை விழாக்களுக்கும் அனுமதி இல்லை.

6. உணவகங்கள், விடுதிகள், அடுமணைகள், தங்கும் விடுதிகள் மற்றும் உறைவிடங்களில் 50% வாடிக்கையாளர்கள் மட்டும் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படும்.

7. திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகள் அதிகபட்சம் 100 நபர்களுடன் மட்டும் நடத்த அனுமதிக்கப்படும்.

8. இறப்பு சார்ந்த நிகழ்வுகள் 50 நபர்களுக்கு மிகாமல் அனுமதிக்கப்படும்.

9. துணிக்கடைகள் மற்றும் நகைக்கடைகளில் ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுக்கு மிகாமல் செயல்படுவதை உறுதி செய்யுமாறு உரிமையாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

10. கேளிக்கை விடுதிகளில் (Clubs) உள்ள உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டுக்கள், உணவகங்கள் ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

11. உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் யோகா பயிற்சி நிலையங்கள் ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

12. அனைத்து திரையரங்குகளிலும் (Multiplex/ Cinemas/Theatres) அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் அதிகபட்சம் 50% பார்வையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

13. உள் விளையாட்டு அரங்குகளில் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி 50% பார்வையாளர்களுடன் விளையாட்டு போட்டிகள் நடத்த அனுமதிக்கப்படும்.  வழக்கமான பயிற்சிகள் நடத்த தடையில்லை.

14. அனைத்து உள் அரங்குகளில் நடத்தப்படும் கருத்தரங்கங்கள், இசை, நாடகம் போன்ற நிகழ்ச்சிகள் அதிகபட்சம் 50% பார்வையாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி நடத்த அனுமதிக்கப்படும்.

15. அழகு நிலையங்கள், சலூன்கள் (Beauty Parlour, Salons and Spas) போன்றவை ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

16. அனைத்து பொழுதுபோக்கு/கேளிக்கைப் பூங்காக்கள் (Entertainment/Amusement parks) நீர் விளையாட்டுகளைத் (Water sports) தவிர்த்து, கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 50 சதவிகிதம் வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

மேற்கண்ட கட்டுப்பாடுகள் தவிர்த்து கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக விதிக்கப்பட்ட ஏனைய கட்டுபாடுகள் விலக்கிக் கொள்ளப்படுகின்றன.  

கல்வி நிறுவனங்கள்

     1. நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி 1-2-2022 முதல் அனைத்து பள்ளிகளிலும் பயிலும் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்படும்.     

     2. தற்போது கொரோனா பாதுகாப்பு மையங்களாக (Covid Care Centre) செயல்படும் கல்லூரிகள் தவிர்த்து ஏனைய அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் / தொழிற்பயிற்சி மற்றும் பயிற்சி நிலையங்கள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி 1-2-2022 முதல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. இதற்கான உரிய முன்னேற்பாடுகளை சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.

ஊரடங்கு நீக்கம்:

* 28-1-2022 முதல் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரையிலான ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்படுகிறது.

* வரும் ஞாயிற்றுக்கிழமை (30-1-2022) முழு ஊரடங்கு கிடையாது.

     

பொது அறிவுரைகள்:

* இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறும், முதல் தவணை தடுப்பூசி செலுத்தியிருந்து, இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் உடனடியாக இரண்டாம் தவணை தடுப்பூசியையும் செலுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

* கடைகளின் நுழைவு வாயிலில், வாடிக்கையாளர் பயன்படுத்தும் வகையில் கை சுத்திகரிப்பான்கள் (Hand Sanitizer with Dispenser) கட்டாயமாக வைக்கப்படுவதோடு, உடல் வெப்ப நிலை பரிசோதனை கருவி கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும் (Thermal Screening).   

* கடைகளில் பணிபுரிபவர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிவதை சம்மந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். தவறும்பட்சத்தில் சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

* வணிக வளாகங்கள் மற்றும் கடைகளில் பணிபுரிபவர்கள், உரிமையாளர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று வைத்திருக்க வேண்டும்.

நோய்த் தொற்றை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள்

* நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களை கண்டறிதல், நோய்த் தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிதல், சிகிச்சை அளித்தல், தடுப்பூசி செலுத்துதல் மற்றும் கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுதல் ஆகிய கோட்பாடுகள் கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்படும்.

* கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்கு, நோய்த் தொற்று பாதிப்பிற்குள்ளானவர்கள் உள்ள பகுதிகளில், நோய்க் கட்டுப்பாட்டு மண்டல எல்லைகளை நுண்ணளவு வரை (Micro Level) வரையறை செய்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளின்படி, தீவிரமாக நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட  ஆட்சியர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ள வேண்டும். வரையறுக்கப்பட்ட நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில், பின்வரும் நோய்க் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும்.

* நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் அத்தியாவசியச் செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட வேண்டும். இந்த நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகளில், மருத்துவ அவசர சேவைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்குதல் தவிர,  இதர செயல்பாடுகளுக்கு அனுமதி இல்லை.

மக்களாகிய உங்கள் மீது நம்பிக்கை வைத்து மேற்கண்ட தளர்வுகள் அனைத்தும் அரசால் வழங்கப்பட்டுள்ள நிலையில், பொது இடங்களில் கட்டாயம் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியினை கடைபிடித்து மற்றும் இரண்டு தவணை தடுப்பூசியினை செலுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். கொரோனா தொற்றிலிருந்து மக்களைக் காத்திட அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு உங்கள் அனைவரையும் கனிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

Related Stories: