சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது

பூந்தமல்லி: சென்னை மதுரவாயலை சேர்ந்தவர் நீலா (33), திருவேற்காட்டில் பேக்கரி கடை நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் நீலாவின் கடைக்கு ஒரு வாலிபர் சென்றார். அப்போது அவர், கேக் ஆர்டர் செய்வது போல் பேச்சு கொடுத்தார். அப்போது நீலா, அணிந்திருந்த செயினை பார்த்தும் அந்த செயின் மாடல் நன்றாக இருக்கிறது. அதுபோல் தனது மனைவிக்கு வாங்கி தர வேண்டும். அதன் மாடலை, தனது செல்போனில் போட்டோ எடுத்து கொள்கிறேன் என கூறியுள்ளார். இதையடுத்து நீலா, தனது கழுத்தில் அணிந்திருந்த 2 சவரன் செயினை கழற்றி டேபிள் மீது வைத்துள்ளார்.

அப்போது கடைக்கு மற்றொரு வாடிக்கையாளர் வந்து பொருள் கேட்டபோது, அதை எடுப்பதற்காக, நீலா சென்றார் அப்போது, 2 சவரன் நகையை எடுத்து கொண்டு வாலிபர் மாயமானார். இதுகுறித்து திருவேற்காடு போலீசில் நீலா புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், சென்னை தி.நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஏழுமலை (எ) துரை (33), நகை திருடியது தெரிந்தது. இதையடுத்து போலீசார், நேற்று அவரை, சுற்றி வளைத்து கைது செய்தனர். விசாரணையில் சூதாட்டத்தில் அதிக பணத்தை இழந்ததால் நகையை திருடியது தெரிந்தது. தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து, அவரிடம் இருந்து நகை மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர்.

Related Stories: