திருக்கழுக்குன்றம் நெடுஞ்சாலை துறை அலுவலகம் எதிரே சாலையின் நடுவே குவிக்கப்பட்ட மண்மேடு: தொடரும் விபத்துகள்

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் - மாமல்லபுரம் சாலையில், திருக்கழுக்குன்றம் பேரூராட்சி கானகோயில்பேட்டை பகுதியில், நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் நுழைவாயில் பகுதியில், சாலையில் கடந்த 3 வாரங்களுக்கு முன் குடிநீர் இணைப்பில் பழுது ஏற்பட்டது. அதனை சரி செய்வதற்காக, பேரூராட்சி ஊழியர்கள், அந்த இடத்தில் பள்ளம் தோண்டினர். பழுது சரி செய்த பின்னர், அந்த பள்ளத்தை மூடினர். ஆனால், பள்ளத்தை மூடி சமன் செய்யாமல், தோண்டி எடுக்கப்பட்ட தார் சாலை மற்றும் மண்ணை கொண்டு மலைபோல் சாலையின் நடுவே மேடாக குவித்து வைத்துவிட்டு சென்றனர்.

இதனால், இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தை சந்திக்கின்றனர். மேலும், மாலை மற்றும் இரவு வேளைகளில் நடந்து செல்லும் பொதுமக்களும், அந்த மேட்டில் தடுமாறி விழுந்து காயமடைகிறார்கள். ஒன்றியம் முழுவதும் நெடுஞ்சாலைகளில் பள்ளம் மற்றும் பழுது ஏற்பட்டால் சரி செய்து சீரமைக்க வேண்டிய நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் எதிரிலேயே, இதுபோல் பள்ளத்தை தோண்டி காட்சி பொருளாக இருப்பது பொதுமக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. எனவே, விபத்து மற்றும் ஆபத்துக்களை தவிர்க்க உடனடியாக நெடுஞ்சாலையில் உள்ள அந்த மேட்டை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: