கொரோனா கட்டுப்பாடுகள், பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பட்ஜெட்; 5 மாநில தேர்தல்; அடுத்த ஜனாதிபதி யார்?... பிரதமர் மோடிக்கு ஏற்பட்டுள்ள அடுத்தடுத்த அரசியல் நெருக்கடி

புதுடெல்லி: கொரோனா கட்டுப்பாடுகள், பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் ஒன்றிய பட்ஜெட், 5 மாநில பேரவை தேர்தல், அடுத்த ஜனாதிபதி தேர்வு குறித்து பிரதமர் மோடி அடுத்தடுத்த அரசியல் நெருக்கடிக்கு ஆளாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் மோடி இரண்டாவது முறையாக கடந்த 2019ல் பிரதமராக பதவியேற்ற சில மாதங்களில் கொரோனா பெருந்தொற்று இந்தியாவை ஆட்டிப் படைக்கிறது. கிட்டத்திட்ட 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் நாடு இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. இந்த நிலையில் வரும் 31ம் தேதி ஒன்றிய அரசின் 2022-23ம் ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்குகிறது. பிப். 1ம் தேதி ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒன்றிய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

பிப். 10ம் தேதி முதல் மார்ச் முதல் வாரம் வரை உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில் பேரவை தேர்தல்கள் நடைபெறுகின்றன. மார்ச் 10ம் தேதி 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகிறது. அதன் தொடர்ச்சியாக ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்வு குறித்த பரபரப்பும் ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் முதல் பிரதமர் மோடி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் நிதி அமைச்சக அதிகாரிகளுடன் பட்ஜெட் குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். கடந்த திங்கட்கிழமையன்று பொருளாதார ஆய்வறிக்கைக்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டது. இந்த அறிக்கை வரும் 31ம் தேதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.

கொரோனா வைரஸ், விவசாயிகள் போராட்டம், 5 மாநில தேர்தல், பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் ஒன்றிய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதால், இந்த பட்ஜெட் மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதற்கடுத்த இரண்டாவது இடத்தில் ஐந்து மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் உள்ளன. உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் மணிப்பூர் ஆகியவை மாநிலங்களில் பாஜக மீண்டும் ஆட்சி பிடிக்கும் என்று கூறப்பட்டாலும், பஞ்சாப், கோவா மாநிலங்களில் தோல்வியை சந்திக்க நேரிடும் என்று கருத்து கணிப்புகள் கூறுகின்றன.

தேர்தல் முடிவுகளின் தாக்கம் பிரதமர் மோடிக்கு மூன்றாவது அரசியல் நெருக்கடியை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

அதாவது ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24ம் தேதியும், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் ஆகஸ்ட் 10ம் தேதியும் முடிவடைகிறது. அதனால், மேற்கண்ட உயர் பதவிக்கான ஒருமித்த கருத்தை ஏற்படுத்த வேண்டிய கட்டாயத்தில் பிரதமர் மோடி உள்ளார். இதில் ஒரு விஷயம் தெளிவாக தெரிகிறது. அதாவது ராம்நாத் கோவிந்த் மற்றும் வெங்கையா நாயுடுவுக்கு இரண்டாவது முறையாக அதே பதவி வழங்கப்படாது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பட்ஜெட் கூட்டத் தொடர் காலகட்டத்தில் அடுத்த ஜனாதிபதி குறித்த சாத்தியமான வேட்பாளர் யார் என்பதை பாஜக தலைமை இறுதி செய்யும் என்று கூறப்படுகிறது.

கடந்த 2017ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்வை போன்று, இந்த முறை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பது என்பது அவ்வளவு சுலபமாக இருக்காது. காரணம், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்த, சிவசேனா, அகாலிதளம் போன்ற கட்சிகள் கூட்டணியில் இருந்து விலகிவிட்டன. அதனால், பாஜகவின் பலம் குறைந்து காணப்படுகிறது. ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசமாக மாறியதால், அங்கு சட்டசபையும் கலைக்கப்பட்டது. இதனால் ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான மொத்த வாக்குகளில் 55 சதவீதத்தைப் பெறுவதில் ஆளும் பாஜகவுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் பிரதமர் மோடி மிகவும் மன அழுத்தத்தில் இருக்கிறார்.

நாடாளுமன்றத்தில் உள்ள 735 எம்பிக்கள், மாநில சட்டமன்றத்தில் உள்ள 4,128 எம்எல்ஏக்கள் வாக்களிக்க தகுதி உள்ளவர்கள் என்பதால், விகிதாசார பிரதிநிதித்துவ அடிப்படையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. அல்லது ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சிகளின் ஒருமித்த வேட்பாளர் ஒருவர் ஜனாதிபதியாக அறிவிக்க முடியும். சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்த ஆர்எஸ்எஸ் தலைவர்களுக்கும், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுக்கும் இடையே நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அடுத்த ஜனாதிபதி தேர்தல் குறித்து விரிவான விவாதம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து இரண்டு ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள், பிரதமர் மோடியையும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் சந்தித்ததாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், அடுத்த ஜனாதிபதி பதவிக்கான பட்டியலில் பிரதமர் மோடியின் தனிப்பட்ட விருப்பமாக தென் மாநிலத்தை சேர்ந்தவர் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார். குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த பெண் ஒருவரை ஜனாதிபதியாக நியமிக்க ஆலோசிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. எனவே ஜனாதிபதி வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் ஜூலை முதல் வாரத்தில் இறுதி செய்யப்படும். அவ்வாறு தேர்வு செய்யப்படும் பிரமுகர் குறித்து பின்னணி ஆச்சரியமானதாக இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: