யானை தந்தத்தில் புலி பல் செய்து விற்க முயன்ற தந்தை, மகன் கைது

திருச்சி: தேனி மாவட்டம் தேவதானப்பட்டியில் யானை தந்தத்தில் புலி பல் செய்து விற்பனை செய்த 2 பேரை வனத்துறையினர் அண்மையில் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், திருச்சி துவாக்குடி அருகே தேவராயநேரி நரிக்குறவர் காலனி பகுதியில் 2 பேர்  யானை தந்தத்தில் புலி பல் செய்து விற்பது தெரிய வந்தது. இதையடுத்து வன சரகர்கள் தேவராயநேரி பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இந்த சோதனையில் நரிக்குறவர் காலனியை சேர்ந்த சவுந்தரராஜன்(52), அவரது மகன் அருண்பாண்டி(28) ஆகியோரிடம் சிறிய அளவிலான யானை தந்தம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. யானை தந்தத்தை துண்டுகளாக்கி செயின், மோதிரங்களில் பதித்து அதிக விலைக்கு விற்க திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவர்களிடமிருந்து 3 செமீ நீளம், 1.5 செமீ அகலத்தில் இருந்த யானை தந்தத்தில் இருந்த 2 புலி பல், மீதமுள்ள 3 சிறிய அளவிலான யானை தந்தத்தையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து 2 பேரையும் கைது செய்து வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் சென்னையில் யானை தந்தம் வாங்கியதாக தெரிவித்தனர். தொடர்ந்து, இருவரையும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார். மேலும் யானை தந்தம் இவர்களுக்கு எப்படி கிடைத்தது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: