நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் குரும்பை உதிர்வதை தடுக்கும் ‘தென்னை டானிக்’ தயார்-திட்ட அதிகாரி தகவல்

நீடாமங்கலம் : தென்னை குரும்பை உதிர்வதை தடுக்கும் தென்னை டானிக் விற்பனைக்கு தயார் என நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையம் திட்ட ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்த தகவலின்படி காவிரி டெல்டா மாவட்டங்களில் தென்னை இறவைப் பயிராகவும் மானாவாரி பயிராகவும் பயிரிடப்பட்டு வருகிறது. சமீபத்திய கஜா மற்றும் புரவி புயல் காரணமாக பல மரங்கள் சாய்ந்து அழிந்துவிட்டன. எஞ்சிய மரங்கள் பல இடங்களில் சரியாக பராமரிக்கப்படாமல் குறைந்த மகசூல் கிடைப்பதால் விவசாயிகளுக்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.

தென்னையில் குரும்பை வைத்தல், குரும்பை அனைத்தும் உதிராமல் காய்களாக மாறவும், திரட்சியான தேங்காய்கள் கிடைக்கவும், ஊட்டச்சத்துக்கள் மற்றும் நீர்ப்பாசனம் மிகவும் முக்கியமாகும்.

இது தவிர குரும்பை உதிராமல் தடுக்க கோயம்புத்தூர் வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கண்டுபிடிப்பான தென்னை டானிக் என்ற தென்னை மரத்திற்கான பிரத்யோகமாக உருவாக்கப்பட்ட தென்னை டானிக் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

விவசாயிகளின் வேண்டுகோளுக்கு இணங்க நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையம் இந்த தென்னை டானிக் சமீப காலமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு லிட்டர் தென்னை டானிக் உடன் 4 லிட்டர் நீர் சேர்த்து ஒரு மரத்திற்கு 200 மில்லி வீதம் 25 மரங்களுக்கு வேரில் பாலிதீன் பையைக் கொண்டு கட்ட வேண்டும். ஒரு வருடத்திற்கு மேல் உள்ள அனைத்து மரங்களுக்கும் மரத்திலிருந்து இரண்டடி தள்ளி மண்ணைத் தோண்டும்போது கிடைக்கும் இளம் வேர்களில் கத்தியைக் கொண்டு சீவி தென்னை டானிக் பாக்கெட்டை உள்ளே நுழைத்து கட்டி விடவேண்டும்.

வறட்சியாக இருக்கும் போது ஓரிரு நாட்களில் இந்த மருந்து மரத்தால் உறிஞ்சப்பட்டு பயிர் எடுத்துக்கொள்கிறது.6 மாதங்களுக்கு ஒருமுறை இதை பயன்படுத்தும்போது தென்னை இலைகள், ஓலைகள் கரும் பச்சை நிறமாக மாறி குரும்பை உதிராமல் வாளிப்பான காய்களை தரமுடியும். ஒரு லிட்டர் விலை ரூ.309. ஒரு லிட்டர் வாங்கும்போது 25 மரங்களுக்கு அதனைக் கட்ட முடியும். தேவைப்படும் விவசாயிகள் வேளாண் அறிவியல் அலுவலரை தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளவும். மேலும் விவரங்களுக்கு நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலைய பண்ணை மேலாளர் நக்கீரனை 93602 47160 என்ற செல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Related Stories: