வடகிழக்கு பருவமழையால் சேதமான பயிர்கள் 13,405 பேருக்கு 9.2 கோடி நிவாரண தொகைக்கான ஆணை: அமைச்சர் ஆவடி நாசர் வழங்கினார்

திருவள்ளூர்: மாவட்ட ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் உணவுத்துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் சம்பா பருவத்திற்கு அமைத்துள்ள நேரடி நெல்கொள்முதல் நிலையம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை வகித்தார். பூந்தமல்லி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி, இணைப்பதிவாளர் பா.ஜெய, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வி.எபினேசர், வாணிப கழகம் மண்டல மேலாளர் ஜே.சேகர், துணை மண்டல மேலாளர் முனுசாமி, துணை மேலாளர் எஸ்.மதுரநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் நேரடி நெல்கொள்முதல் நிலையத்தை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் தொடங்கி வைத்தார். பிறகு வடகிழக்கு பருவமழையினால் 33 சதவீதம் பாதிப்படைந்த வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கும் திட்டத்தின் மூலம் 13405 பேருக்கு ₹9.2 கோடியில் நிவாரண தொகைக்கான ஆணைகளை வழங்கினார்.அப்போது, அவர் பேசியதாவது: பருவ மழையால் வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்கள் பாதிக்கப்பட்டது. மாவட்டத்தில் நெல் வளர்ச்சி பருவத்தில் உள்ள பயிர்கள் மட்டும் 6643 ஹெக்டேர், நெற்கதிர் மற்றும் கதிர்முதிர்ச்சி பருவத்தில் 1859 ஹெக்டேர், பயிர் வகைகள் 2.8 ஹெக்டேர், நிலக்கடலை 79.8 ஹெக்டேர் மற்றும் கரும்பு 14.07 ஹெக்டேர் என 8399 ஹெக்டேரும், தோட்டகலைப்பயிர் 682 ஹெக்டேரிலும் பாதிக்கப்பட்டது.

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் 11,388 பேருக்கு ₹7.64 கோடியும், தோட்டக்கலைத் துறையின் மூலம் 2017 பேருக்கு ₹1.38 கோடியும் ஆக மொத்தம் 13,405 பேருக்கு ₹9.2 கோடி நிவாரணத்தொகை அவரவர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.அனைத்து வட்டாரங்களிலும் 74 இடங்களில், கூட்டுறவு துறை மூலம் 4 இடங்களிலும் என 78 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: