சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் பரபரப்பு; கை துப்பாக்கியுடன் கேரளா நபர் கைது: குடியரசு தினத்தை சீர்குலைக்க சதியா என போலீசார் தீவிர விசாரணை

சென்னை: சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் கை துப்பாக்கியை மறைத்து கொண்டு வந்த கேரளா சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர். குடியரசு தின விழாவை சீர்குலைக்க சதியா என பிடிபட்ட நபரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் வழியாக நேற்று மாலை எழும்பூர் செல்ல 60 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கையில் பையுடன் வந்தார். வழக்கமாக மெட்ரோ ரயில் நிலையத்தில் பயணிகள் கொண்டு வரும் உடமைகளை ஸ்கேன் செய்வது வழக்கம்.

அதன்படி நேற்று மாலை வந்த நபரின் பையை மெட்ரோ ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஸ்கேன் செய்தனர். அப்போது கை துப்பாக்கி ஒன்று மற்றும் 10 ஏடிஎம் கார்டுகள் இருந்ததை கவனித்தனர். உடனே பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பையை கொண்டு வந்த நபரை தனியாக அழைத்து நிற்கும்படி கூறி அவர் கொண்டு வந்த பையை பிரித்து பார்க்க முயன்றனர். இதை கவனித்த அந்த நபர் அங்கிருந்து தப்பித்து ஓட முயன்றார். ஆனால் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அந்த நபரை பிடித்து அவர் முன்னிலையில் பையை பிரித்து பார்த்தனர்.

அப்போது அதிநவீன கை துப்பாக்கி ஒன்று இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே சம்பவம் குறித்து பெரியமேடு போலீசாருக்கு மெட்ரோ ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தகவல் அளித்தனர். அதன்படி விரைந்து வந்த போலீசார் துப்பாக்கி கொண்டு வந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், கேரளா மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள கொளத்தூர் அத்தோலி தெக்கேல் பகுதியை சேர்ந்த விஜயன்(60) என்றும், இவர் சென்னைக்கு வேலை தேடி கோவையில் இருந்து நேற்று மாலை கோவை விரைவு ரயில் மூலம் சென்னை வந்ததாகவும், அதன் பிறகு எழும்பூர் செல்ல, மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வந்ததாக கூறினார்.

ஆனால் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் அவரை போலீசார் கைது செய்து, வேலை தேடி வந்த நபருக்கு துப்பாக்கி எதற்கு, 10க்கும் மேற்பட்ட ஏடிஎம் கார்டுகள் எதற்கு என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் கொண்டு வந்த துப்பாக்கிற்கு உரிமம் இல்லையென்றும் தெரியவந்தது. அதேநேரம் குடியரசு தினம் வரும் புதன் கிழமை கொண்டாடப்படுகிறது. இதனால் அதை சீர்குலைக்க கையில் துப்பாக்கியுடன் வந்தாரா, எழும்பூரில் யாரை பார்க்க வந்தார் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: