நடமாடும் ரத்த தான ஊர்தியில் தமிழை நீக்கி விட்டு இந்தியில் வாசகம்-சமூக அமைப்புகள் கண்டனம்

புதுச்சேரி : புதுச்சேரியில் நடமாடும் ரத்த தான ஊர்தியில் தமிழில் இருந்த வாசகத்தை அகற்றிவிட்டு, இந்தியில் வாசகம் அமைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 புதுச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் கீழ் நடமாடும் ரத்த தான ஊர்தி உள்ளது. இந்த ஊர்தியில் ரத்த தானம் செய்வதற்கான அனைத்து வசதிகளும் இடம் பெற்றுள்ளன. புதுவையில் ரத்த தான முகாம் நடைபெறும் இடங்களுக்கு இந்த ஊர்தியில் தான் ரத்த தான குழுவினர் சென்று, ரத்தத்தை தானமாக பெற்று அரசு மருத்துவமனைக்கு கொண்டு வருவார்கள். இந்நிலையில் இந்த ஊர்தியை புதுப்பிப்பதற்காக ஹைதராபாத் கொண்டு செல்லப்பட்டது. அங்கு ஊர்தி புதுப்பிப்பு பணி முடிந்து, தற்போது புதுச்சேரி திரும்பியுள்ளது.

 ஏற்கனவே இந்த ஊர்தியின் ஒரு பக்கத்தில் `ரத்த தானம், உயிர் தானம்’ என்ற வாசகம் தமிழிலும், மற்றொரு பக்கத்தில் ஆங்கிலத்திலும் இடம் பெற்றிருந்தது. ஊர்தி புதுப்பிக்கப்பட்ட பிறகு தமிழில் இருந்த வாசகம் அழிக்கப்பட்டு, அதற்கு பதிலாக இந்தியில் வாசகம் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், தேசிய ரத்த மாற்று கவுன்சில் என்ற வாசகம் கூட ஆங்கிலம் மற்றும் இந்தியில் அமைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தினர் ஊர்தியில் தனியாக தமிழ் வாசகங்களில் ஸ்டிக்கர்களை ஒட்டியுள்ளனர்.

 இருப்பினும், ரத்த தான ஊர்தியில் தமிழில் இருந்த வாசகத்தை நீக்கிவிட்டு, இந்தியில் வாசகம் இடம் பெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு உயிர் துளி அமைப்பு உள்ளிட்ட பல சமூக அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சுகாதாரத்துறை இயக்குநர் ராமுலுவிடமும் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்தியில் எழுதப்பட்ட வாசகத்தை அழித்துவிட்டு மீண்டும் தமிழில் வாசகங்கள் எழுத அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: