திருச்சியிலிருந்து இலங்கை புறப்பட்ட ஸ்ரீலங்கன் விமானத்தில் திடீர் கோளாறு: ரன்வேயில் நிறுத்தப்பட்டதால் 120 பயணிகள் தப்பினர்

திருச்சி: திருச்சியில் இருந்து இலங்கை புறப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டது. விமானியின் சாதுர்யத்தால் 120 பயணிகள் தப்பினர். திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து நேற்று காலை 10 மணியளவில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் இலங்கைக்கு புறப்பட தயாராக இருந்தது. இதில் செல்ல இருந்த 120 பயணிகள் அனைத்து சோதனைகளும் முடிந்து விமானத்தில் ஏற்றப்பட்டனர். விமானம் மேலே செல்ல ஓடுதளத்தில் வேகமாக சென்றது. அப்போது விமானிக்கு மானிடரில் இயந்திர கோளாறு சிக்னல் காட்டியது. இதையடுத்து விமானி உடனடியாக ரன்வேயிலே விமானத்தை சாமர்த்தியமாக நிறுத்தினார். இதனால் 120 பயணிகள் உயிர் தப்பினர்.

இதுகுறித்து திருச்சி விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இழுவை வாகனம் மூலம் விமானம் புறப்பட்ட இடத்திற்கே இழுத்து வரப்பட்டு நிறுத்தப்பட்டது. பின்னர் அதிலிருந்த பயணிகள் பாதுகாப்பாக இறக்கப்பட்டனர். தொடர்ந்து 120 பயணிகளும் ஒரு ஓட்டலில் தங்க வைக்கப்பட்டனர். இந்த விமானம் பழுது குறித்து இலங்கை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. விமானத்தை பழுது பார்க்க அங்கிருந்து தொழில்நுட்ப வல்லுனர்கள் திருச்சி வருகின்றனர். இதற்கிடையில் இன்று (21ம்தேதி) காலை இலங்கையில் இருந்து திருச்சி வரும் சிறப்பு விமானம் 120 பயணிகளையும் ஏற்றிக்கொண்டு மீண்டும் இலங்கை செல்லும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: