பாறை ஓவியங்களை கற்று ஓவியம் தீட்டும் பழங்குடியின சிறுமி

குன்னூர் : நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில்  இருளர் மற்றும் குரும்பர் பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். கரிக்கையூர்  அருகேஅடர் வனப்பகுதிக்குள் சுமார் 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள் அதிகளவில் உள்ளன. வரலாற்றிற்கு முற்பட்ட காலத்தின் வாழ்ந்த மனிதர்களின் வாழ்வியல் முறைகளை ஓவியமாக வரைந்துச் சென்றுள்ளனர். இயற்கையில் கிடைக்ககூடிய தாவரங்கள் மற்றும் மண்ணைக் கொண்டு வண்ணங்களை உருவாக்கி ஓவியங்களாக வரைந்துள்ளனர்.

இதில் அப்போதைய மனிதர்களின் உணவு, வேட்டை சடங்குகள், நடனங்கள், கால்நடைகள் மற்றும் இசை கருவிகள் போன்றவற்றை தத்ரூபமாக பாறைகளில் ஓவியங்களாக வரைந்துள்ளனர். 5 ஆயிரம் ஆண்டுகளாக மழை மற்றும் வெயிலில் எந்த பாதிப்பும் ஏற்படாமல் இன்றளவும் உள்ளது.  இது வரலாற்று சிறப்பு மிக்க இந்த ஓவியக்கலையை மீட்டெடுக்கும் முயற்சியில் பழங்குடியின குழந்தைகள் ஈடுபட்டுள்ளனர்.

மாமரம் அருகே உள்ள கோழித்தொரை பகுதியை சேர்ந்த ஆனந்த், யோக துர்கா ஆகியோரின் மகள் தர்ஷினி( 11) இவர்கள் குரும்பர் பழங்குடியை சேர்ந்தவர்கள். கொரோனா ஊரடங்கு காலத்தில் தர்ஷினிக்கு பாரம்பரிய  முறையில் ஓவியம் தீட்டுவதில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. அதன் படி தனது உறவினர்கள் மூலம் ஓவியம் தீட்டுவது குறித்து முறையாக கற்றுக்கொண்டார். தர்ஷினி இயற்கையில் கிடைக்கும் வேங்கை மரத்தின் பால் உடன் தண்ணீர் கலந்து பயண்படுத்தி ஓவியங்கள் வரைந்து வருகிறார்.

இது குறித்து தர்ஷினி கூறுகையில்,  முதல் முறையாக தனது பெரியப்பா குரு என்பவர் ஓவியம் தீட்டி வருவதை பார்த்து, இது எவ்வாறு தீட்டுகிறீர்கள் என்று கேட்டுள்ளார். அப்போது பெரிய‌ பாறைகளில் நமது முன்னோர்கள் இது போன்று ஓவியங்கள் தீட்டியுள்ளனர் அதை பார்த்து நாங்கள் கற்றுக்கொண்டோம் என்றனர். உடனே தனக்கு ஓவியம் தீட்ட ஆர்வம் ஏற்பட்டு கற்றுக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.

கடந்த இரு ஆண்டுகளுக்கு மேலாக ஓவியம் தீட்டி வருவதாக தெரிவித்தார். இது குறித்து பழங்குடியின ஆய்வாளரும், செயற்பாட்டாளருமான திருமூர்த்தி கூறுகையில், பல ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்களை பார்த்து பழங்குடியின குழந்தைகள் ஓவியங்கள் தீட்ட கற்றுக்கொண்டு ஓவியங்கள் தீட்டி வருகின்றனர். பாரம்பரிய முறையில் ஓவியங்கள் தீட்டும் மாணவிக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் அந்த ஓவியத்தை பொது மக்கள் பார்வையிட காட்சி படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

Related Stories: