ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ்; 2வது சுற்றில் முகுருசா அனெட் அதிர்ச்சி தோல்வி

மெல்போர்ன்: கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் 2ம் சுற்று போட்டிகள் இன்று நடந்தது. மகளிர் ஒற்றையர் பிரிவில் 3ம் நிலை வீராங்கனையான ஸ்பெயினின் முகுருசா(28), பிரான்சின் அலிஸ் கார்னெட்(31) உடன் மோதினார். இதில் அலிஸ் 6-3, 6-3 என நேர் செட்டில் வென்றார். டபிள்யூடிஏ பைனல்ஸ் தொடர் சாம்பியனான முகுருசா அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார். 6ம் நிலை வீராங்கனையான எஸ்டோனியாவின் 26 வயது அனெட் கொண்டவீட் 2-6, 4-6 என்ற செட் கணக்கில், 19 வயதான டென்மார்க்கின் கிளாரா டாசனிடம் தோல்வி அடைந்தார். 7ம் நிலை வீராங்கனை போலந்தின் இகா ஸ்விடெக், 6-2, 6-2 என ஸ்வீடனின் ரெபேக்கா பீட்டர்சனை சாய்த்தார்.

2ம் நிலை வீராங்கனையான பெலாரசின் அரினா சபலென்கா, 1-6, 6-4, 6-2 என சீனாவின் வாங் சியூவை போராடி வென்றார். அமெரிக்காவின் டேனியல் காலின்ஸ், செக் குடியரசின் மார்கெட்டா வோண்ட்ரூசோவா, ருமேனியாவின் சொரானா சிர்ஸ்டியா, பெல்ஜியத்தின் எலிஸ் மெர்டென்ஸ், ரஷ்யாவின் அனஸ்தேசியா ஆகியோரும் 2வது சுற்றில் வெற்றி பெற்று 3வது சுற்றுக்குள் நுழைந்தனர். ஆடவர் ஒற்றையர் 2வது சுற்றில், 5ம் நிலை வீரரான ரஷ்யாவின் ஆண்ட்ரி ரூப்லெவ் 6-4, 6-2, 6-0 என லிதுவேனியாவின் ரிகார்டாஸ் பெரான்கிசை வீழ்த்தினார். குரோஷியாவின் மரின் சிலிச், 6-2, 6-3, 3-6, 7-6 என ஸ்லோவாக்கியாவின் நார்பர்ட் கோம்போசையும், பிரான்சின் மாக்சிம் க்ரெஸ்ஸி, செக் குடியரசின் தாமஸ்மச்சாக்கையும் வீழ்த்தினர்.

Related Stories: