அமெரிக்க அதிபர் பைடன் நிர்வாகத்தில் ஓரங்கட்டப்படும் கமலா ஹாரிஸ்: முக்கிய ஆலோசனைகளில் புறக்கணிப்பு

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையிலான ஓராண்டு ஆட்சியில் பல்வேறு முக்கிய ஆலோசனைகளில் துணை அதிபர் கமலா ஹாரிஸ் இடம் பெறவில்லை. இதனால், கமலா ஹாரிஸ் திட்டமிட்டு ஓரங்கட்டப்படுகிறாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.அமெரிக்காவில் புதிய அதிபராக ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் கடந்த ஆண்டு ஜனவரி 20ம் தேதி பொறுப்பேற்றார். இன்றுடன் அவர் தலைமையிலான அரசு ஓராண்டை நிறைவு செய்துள்ளது. அவருடன் துணை அதிபராக தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ் பதவியேற்றார். துணை ஜனாதிபதியாகும் முதல் பெண், முதல் அமெரிக்க கறுப்பின பெண் உள்ளிட்ட பல்வேறு பெருமைகளுடன் கமலா ஹாரிஸ் பொறுப்பை ஏற்றார். மேலும், 2024ம் ஆண்டில் அடுத்து நடக்க உள்ள அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ்தான் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக இருப்பார் என்றும் பெரிய அளவில் பேசப்பட்டது.

ஆனால், பைடன் தலைமையிலான ஓராண்டு ஆட்சியில் கமலா ஹாரிஸ் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாக அவரது ஆதரவாளர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். ஆரம்பத்தில் இருந்தே பைடன் ஆதரவு அதிகாரிகளிடமிருந்து கமலாவுக்கு போதிய ஆதரவு கிடைக்கவில்லை. போலீஸ் சட்ட திருத்தம் உள்ளிட்ட பல முக்கிய விஷயங்களில் பைடன், கமலாவை புறக்கணித்துள்ளார். குடியேற்ற விவகாரம் உள்ளிட்ட சில கமலாவின் அணுகுமுறைகள் பைடனுக்கு அதிருப்தி அளித்துள்ளதால் கமலாவின் ஆலோசனைகளை அவர் விரும்புவதில்லை என்றும் கூறப்படுகிறது.

நாட்டில் அனைவருக்கும் சமமான வாக்களிக்கும் உரிமை வழங்கும் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் விரைவில் கொண்டு வரப்பட உள்ளது. பைடன் ஆட்சியில் கொண்டு வரப்படும் முக்கிய சட்ட திருத்தம் இது. இதற்காக சமீபத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் கமலாவுக்கு அழைப்பு விடுக்கவில்லை. அவர் ஏன் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்ற கேள்விக்கு வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி மற்றும் கமலா உதவியாளர்கள் சரியான பதிலையும் தரவில்லை. இதனால் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட கமலா ஹாரிஸ், பதவியேற்ற ஓராண்டில் குறிப்பிட்ட அளவில் முத்திரை பதிக்க முடியாமல் போயுள்ளது.

துணை அதிபர்கள் பிரகாசிப்பது கடினம்

கமலா ஹாரிஸ் செயல்பாடு குறித்து, முன்னாள் துணை அதிபர் அல் கோரின் தலைமை அதிகாரியாக பணியாற்றிய ராய் நீல் கூறுகையில், ‘‘அமெரிக்காவில் எந்த ஒரு துணை அதிபரும் பிரகாசிப்பது கடினம்தான். அதுவும் கொரோனா தொற்றுள்ள இதுபோன்ற சூழல், நிலைமையை மேலும் சிக்கலாக்கும். துணை அதிபர் என்பவர், அதிபரின் விருப்பப்படி மட்டுமே செயல்பட முடியும். முக்கிய பிரச்னைகளில் துணை அதிபரின் பங்கு வரம்புக்கு உட்பட்டது. அதைத்தாண்டி செயல்பட முயல்வது, விபரீதத்தை ஏற்படுத்தும்,’’ என்றார்.

கமலா ஹாரிஸின் சில உதவியாளர்கள் கூறுகையில், ‘‘நிர்வாகத்தின் வெற்றிகளுக்கு பெருமை சேர்ப்பதில், அதிபரை விட முந்திக் கொண்டு செல்லாமல் இருப்பதில் கமலா ஹாரிஸ் கவனமாக இருக்கிறார். ஹாரிஸ் தனது கருத்துக்களை தனிப்பட்ட முறையில் அதிபரிடம் கூறி வருகிறார். எந்த விஷயத்திலும் அதிபர் வெற்றி பெறுவதே அவரது முக்கிய பணியாக இருக்கிறது,’’ என்கின்றனர்.

Related Stories: