நாட்டரசன்கோட்டையில் செவ்வாய் பொங்கல் விழா

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், நாட்டரசன்கோட்டை கண்ணுடையநாயகி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மாட்டுப்பொங்கல் முடிந்து வரும் முதல் செவ்வாய்க்கிழமை நகரத்தார்களால் செவ்வாய் பொங்கல் விழா நடத்தப்படுவது வழக்கம். இந்தாண்டு விழா நேற்று மாலை நடந்தது. முதல் பொங்கல் பானை வைக்க தேர்வு செய்யப்பட்ட குடும்பத்தினர் சிறப்பு செய்யப்பட்டு அழைத்து வரப்பட்டனர். அவர்கள் 4.30 மணிக்கு பொங்கல் வைக்க தொடங்கியவுடன் தொடர்ந்து மற்றவர்களும் பொங்கலிட தொடங்கினர்.

முதல் பொங்கல் பானை மட்டும் மண் பானையிலும் மற்றவர்கள் வெண்கல பானைகளிலும் பொங்கல் வைத்தனர். நகரத்தார் சார்பில் 917 பேர் பொங்கலிட்டனர். இவர்கள் தவிர நேர்த்திக்கடன் வைத்துள்ள நூற்றுக்கணக்கானவர்களும் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபாடு செய்தனர். இதனை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் வந்திருந்தனர்.

நகரத்தார் கூறுகையில், ‘‘வேண்டுதல் அடிப்படையில் பல நூற்றாண்டுகளாக தொடர்ச்சியாக இந்த விழா நடந்து வருகிறது. தற்போது ஒரே இடத்தில் கூடி விழா நடத்துவது என்பது குறைந்து விட்டது. ஆனால் இவ்வூரில் செவ்வாய் பொங்கல் வைப்பவர்களின் எண்ணிக்கை குறையாமல் தற்போது வரை தொடர்ந்து நடந்து வருகிறது. மற்ற விழாக்களுக்கு வரவில்லை என்றாலும் செவ்வாய் பொங்கலுக்கு வந்து விடுவது வழக்கம். இதில் மாப்பிள்ளை மற்றும் பெண் பார்க்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது’’ என்றனர்.

Related Stories: