2வது சுற்றில் ரடுகானு: மர்ரே முன்னேற்றம்

மெல்போர்ன்:ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் 2வது சுற்றில் விளையாட, இளம் வீராங்கனை எம்மா ரடுகானு (இங்கிலாந்து) தகுதி பெற்றார். முன்னணி வீராங்கனைகள் குவித்தோவா, லெய்லா அதிர்ச்சி தோல்வி அடைந்தனர். மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் நேற்று அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்சுடன் (28 வயது, 68வது ரேங்க்) மோதிய யுஎஸ் ஓபன் சாம்பியன் ரடுகானு (19 வயது, 18வது ரேங்க்) 6-0 என்ற கணக்கில் முதல் செட்டை வென்று முன்னிலை பெற்றார். 2வது செட்டில் கடும் நெருக்கடி கொடுத்து ஸ்டீபன்ஸ் 6-2 என வென்று பதிலடி கொடுக்க, சமநிலை ஏற்பட்டது. 3வது செட்டில் அதிரடியாக விளையாடி புள்ளிகளைக் குவித்த ரடுகானு 6-0, 2-6, 6-1 என்ற செட் கணக்கில் வெற்றியை வசப்படுத்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார். இப்போட்டி 1 மணி, 45 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது.

 மற்றொரு முதல் சுற்றில்   போலந்து வீராங்கனை  மக்தலினா ஃபிரிச்சுடன் (24வயது, 105வது ரேஙக்) மோதிய சிமோனா ஹாலெப் (ருமேனியா, 30வயது, 15வது ரேங்க்) 6-4, 6-3 என நேர் செட்களில் வீழ்த்தினார். ஸ்பெயினின் கார்பினி முகுருசா (28வயது, 3வது ரேங்க்) 6-3, 6-4 என நேர் செட்களில் பிரான்சின்  கிளாரா புரேலை (20 வயது, 77வது ரேங்க்) வென்றார். போலந்து நட்சத்திரம் இகா ஸ்வியாடெக் (20வயது, 8வது ரேங்க்) தனது முதல் சுற்றில்  6-3, 6-0 என நேர் செட்களில் இங்கிலாந்தின் ஹரியெட் டார்ட்டை (25வயது, 125வது ரேங்க்) வீழ்த்தினார்.

கடந்த ஆண்டு யுஎஸ் ஓபனில் 2வது இடம் பிடித்த கனடா வீராங்கனை லெய்லா பெர்னாண்டஸ் (19வயது, 24வது ரேங்க்),  தகுதிச்சுற்றில் வென்று பிரதான சுற்றுக்குள் நுழைந்த  ஆஸ்திரேலிய வீராங்கனை மேடிசன் இங்லிஸிடம் (24யது, 139வது ரேங்க்) 4-6, 2-6 என  நேர் செட்களில்   அதிர்ச்சி தோல்வி கண்டார். செக் குடியரசின்  பெட்ரா குவித்தோவா (31வயது, 21வது ரேங்க்) 2-6, 2-6 என நேர் செட்களில்  ருமேனியாவின் சொரானா சிர்ஸ்டியிடம் (31வயது, 38வது ரேங்க்) தோற்றார். ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் களமிறங்கிய இங்கிலாந்து வீரர் ஆண்டி மர்ரே 6-1, 3-6, 6-4, 6-7 (5-7), 6-4 என 5 செட்கள் கடுமையாகப் போராடி ஜார்ஜியாவின் நிகோலஸ் பாசிலாஷ்விலியை வீழ்த்தினார். மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டி 3 மணி, 52 நிமிடத்துக்கு நீடித்தது. முன்னணி வீரர்கள் மெட்வதேவ், ருப்லேவ் (ரஷ்யா), சிட்சிபாஸ் (கிரீஸ்), கிர்ஜியோஸ் (ஆஸி.), யானிக் சின்னர் (இத்தாலி), ஷ்வார்ட்ஸ்மேன் (அர்ஜென்டினா), மரின் சிலிச் (குரோஷியா), திமித்ரோவ் (பல்கேரியா) ஆகியோரும் 2வது சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.

Related Stories: