வரலாற்றிலேயே முதல்முறையாக 1,020 காளைகளை களமிறக்கி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு: 10.30 மணி நேரம் அனல் பறத்திய போட்டி; 21 காளைகளை அடக்கிய வீரருக்கு கார் பரிசு

அலங்காநல்லூர்: அலங்காநல்லூர் வரலாற்றிலேயே முதன்முறையாக 1,020 காளைகளை களமிறக்கி ஜல்லிக்கட்டு நடந்தது. இதில் 21 காளைகளை அடக்கிய மதுரை கருப்பாயூரணி வீரர் கார்த்திக் மற்றும்  புதுக்கோட்டையை சேர்ந்த காளைக்கு கார்கள் பரிசாக வழங்கப்பட்டன. மதுரை மாவட்டத்தில்  பொங்கல் விழாவை முன்னிட்டு கடந்த 14ம் தேதி அவனியாபுரம், 15ம் தேதி பாலமேடு ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு நடந்தது. உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நேற்று நடந்தது. ஜல்லிக்கட்டை முன்னிட்டு அலங்காநல்லூரில் நேற்று அதிகாலை முனியாண்டி, காளியம்மன், முத்தாலம்மன், அரியமலை சாமிகள் ஆகிய கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள், விழா குழுவினர் ஆகியோர்  வாடிவாசல் முன்பு உறுதிமொழி ஏற்றனர். அமைச்சர்கள் பி.மூர்த்தி, பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன், எம்எல்ஏக்கள் வெங்கடேசன், புதூர் பூமிநாதன், மதுரை கலெக்டர் அனீஷ்சேகர், தென்மண்டல ஐஜி அன்பு, டிஐஜி பொன்னி, எஸ்பி பாஸ்கரன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

காலை 7 மணிக்கு ஜல்லிக்கட்டு தொடங்கியது. வாடிவாசலில் இருந்து கோயில் காளைகளை தொடர்ந்து, போட்டி காளைகள் களமிறக்கப்பட்டன. வீரர்களும் உற்சாகத்துடன் காளைகளை அடக்கப் பாய்ந்தனர். காளைகளில் சில சீற்றத்துடன் களத்தில் நின்று போக்கு காட்டின. சில காளைகள், மாடுபிடி வீரர்களிடம் பிடிபட்டன. நேற்றைய போட்டியில் 1,020 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. சுமார் 10.30 மணி நேரம் பரபரப்புடன் இடைவேளையின்றி போட்டி நடந்தது. அலங்காநல்லூர் வரலாற்றிலேயே முதன்முறையாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளைகள் இந்த ஜல்லிக்கட்டில் மட்டுமே அவிழ்த்து விடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மதுரை கருப்பாயூரணியை சேர்ந்த கார்த்திக் அதிகபட்சமாக 21 காளைகளை அடக்கினார். இவருக்கு உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ சார்பில் ரூ.10 லட்சம் மதிப்பிலான கார் முதல் பரிசாக வழங்கப்பட்டது. 19 காளைகளை அடக்கி 2ம் இடம் பிடித்த அலங்காநல்லூரைச் சேர்ந்த ராம்குமார், 13 காளைகளை பிடித்து 3வது இடத்தை பிடித்த சித்தாலங்குடியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் ஆகியோருக்கு டூவீலர்கள் பரிசாக வழங்கப்பட்டன. சிறந்த காளைக்கான முதல் பரிசை புதுக்கோட்டை மாவட்டம், கல்குறிச்சியை சேர்ந்த தமிழ்செல்வனின் காளை தட்டிச் சென்றது.

காளையின் உரிமையாளருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள கார் பரிசாக வழங்கப்பட்டது. 2வது பரிசை திருமங்கலம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ முத்துராமலிங்கத்தின் காளை பெற்றது. இதற்கு டூவீலர் வழங்கப்பட்டது. 3வது பரிசுக்கு குலமங்கலத்தைச் சேர்ந்த வக்கீல் திருப்பதியின் காளை தேர்வானது. இதற்கு பரிசாக ஒரு பசுங்கன்று வழங்கப்பட்டது. பரிசுகளை அமைச்சர்கள் பி.மூர்த்தி, பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் வழங்கினர். ஜல்லிக்கட்டு போட்டியில் போலீஸ் உட்பட 45 பேர் காயமடைந்தனர்.

* களமாடிய காளைக்கு தங்கம்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்ட அனைத்து காளைகளுக்கும்  முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் தலா ஒரு தங்கக்காசு பரிசாக வழங்கப்பட்டது. தவிர வெள்ளிக்காசுகள், டூவீலர்கள், பீரோக்கள், கட்டில்கள், சைக்கிள்கள், மோதிரம், செயின் உள்ளிட்ட பரிசுகளும் காளைகளை அடக்கும் வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் வழங்கப்பட்டன. தமிழ்நாடு முத்தரையர் சங்கம் சார்பில் விடப்பட்ட காளைக்கு ரூ.1 லட்சம் பரிசை மாட்டு உரிமையாளர் அறிவித்தார். ஆடுகளம் அதிர்ந்தது. வீரர்கள் யாரும் காளையை பிடிக்க முடியவில்லை. அனைத்து வீரர்களுக்கும் போக்குகாட்டி பிடிபடாமல் காளை தப்பி சென்றது, அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

* கார்களை வென்ற ‘கார்’....த்திக்

கடந்த 14ம் தேதி மதுரை அவனியாபுரத்தில் நடந்த ஜல்லிக்கட்டில், அதே பகுதியை சேர்ந்த கார்த்திக், 24 காளைகளை அடக்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் வழங்கப்பட்ட காரை பரிசாக வென்றார். நேற்றைய அலங்காநல்லூர் போட்டியில் மதுரை கருப்பாயூரணியை சேர்ந்த கார்த்திக் 21 காளைகளை அடக்கி காரை பரிசாக வென்றுள்ளார். பெயரிலேயே ‘‘கார்’’ இருக்கிற ராசிதானோ என்னவோ? மதுரை மாவட்டத்தில் நடந்த சுமார் 900 வீரர்கள் களமிறங்கிய 3 போட்டிகளில் கார்களை மட்டும் 2 கார்த்திக்குகள் பெற்றுள்ளனர்.

* டோக்கன் கிடைக்கலை... டாப் 1 ஆக வந்தேன்... கார் வென்ற வீரர் உற்சாகம்

21 காளைகளை அடக்கி, முதலிடம் பிடித்து கார் வென்ற வீரர் கார்த்திக் கூறும்போது, ‘‘ஜல்லிக்கட்டில் மாடு பிடி வீரராக களமிறங்க டோக்கன் கிடைக்கவில்லை. கடைசி நேரத்தில் அமைச்சர் பி.மூர்த்தியை அணுகி, என் திறனை விளக்கி, வென்று காட்டுவேன் என உறுதி தந்து டோக்கன் பெற்று மாடுபிடி வீரராக களம் இறங்கினேன். இந்த வெற்றி எனக்கு கிடைத்ததல்ல. என்னை அனுமதித்தவர்களுக்கான, நன்றி காணிக்கையாக இந்த வெற்றியை சமர்ப்பிக்கிறேன்’’ என்றார்.

* வேலூர் கீழ்அரசம்பட்டில் மாடு முட்டியதில் முதியவர் பரிதாப பலி

வேலூர் மாவட்டம் கணியம்பாடி அடுத்த கீழ் அரசம்பட்டில் நேற்று மாடு விடும் விழா நடந்தது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. காளைகளை இருபுறமும் தடுப்புகளின் பின்னால் நின்றவர்கள் மட்டுமின்றி, தடுப்பை மீறி சாலையில் நின்றிருந்தவர்களும் கைகளால் தட்டியும், அடித்தும் விரட்டினர். அப்போது ஒரு காளை அங்கு நின்று வேடிக்கை பார்த்த, திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டை சேர்ந்த நாமதேவன்(60) என்பவர் மார்பில் கொம்பால் குத்தி தூக்கி வீசியது. இதில் அவர் அதே இடத்தில் பலியானார். மேலும் 14 பேர் காயம் அடைந்தனர்.

* சிராவயல், கூலமேடு, ஆலங்குடியில் 192 பேர் காயம்

சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் அருகே சிராவயலில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் 219 காளைகள், 76 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் மாடுகள் முட்டியதில் வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் என 70 பேர் காயமடைந்தனர்.

கூலமேடு: சேலம் மாவட்டம் ஆத்தூர் கூலமேட்டில் ஜல்லிக்கட்டு விழா நேற்று நடந்தது. இதில் பங்கேற்க சேலம், நாமக்கல், தர்மபுரி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி மாவட்டங்களில் இருந்து 595காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் அனுமதிக்கப்பட்டனர். காளைகளுடன் மல்லுக்கட்டியதில் காயமடைந்த 56பேர் காயம் அடைந்து சிகிச்சை பெற்றனர்.

ஆலங்குடி: புதுக்கோட்டை  மாவட்டம் ஆலங்குடி அருகே வன்னியன் விடுதியில் மாயன்பெருமாள் கோயில்  தைத்திருவிழாவையொட்டி கோயில் அருகே உள்ள திடலில் நேற்று காலை ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. மதுரை, சிவகங்கை, பரமக்குடி, தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலிருந்து 745 காளைகள் அழைத்து வரப்பட்டன. 190  மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் மாடுபிடி வீரர்கள், மாட்டின் உரிமையாளர்கள், பார்வையாளர்கள் என 66 பேர் காயமடைந்தனர்.

Related Stories: