மக்களுக்கு தேவையான ஒரு புதிய திட்டத்தை கூட இதுவரை தவெக அரசு செயல்படுத்தவில்லை: ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு

சென்னை: புதுவண்ணாரப்பேட்டை, ஆர்.கே.நகர் தொகுதியில் திமுக சட்டத்துறை சார்பில், முன்னாள் தலைவர் கலைஞர் பிறந்தநாள் விழா தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியுடன், மக்கள் விரோத தவெக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று முன்தினம் இரவு ஏ.இ.கோயில் தெருவில் நடந்தது. திமுக சட்டத்துறை துணைச் செயலாளர் மருது கணேஷ் தலைமை வகித்தார். சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.டி.சேகர் முன்னிலை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பேசியதாவது: ஆட்சியில் இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும், மக்களின் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது திமுக மட்டுமே. திமுகவை அழிக்க நினைத்தவர்கள் யாரும் வரலாற்றில் வெற்றி பெற்றதில்லை. திமுகவை மூட்டைப்பூச்சி போல நசுக்க வேண்டும்’ என்று கூறிய ராஜாஜிக்கே மணிமண்டபம் கட்டியது திமுக அரசுதான்.

வடசென்னையின் வளர்ச்சிக்காக முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தினார். திமுக அரசு கொண்டு வந்த திட்டங்களின் பெயரை மாற்றி தற்போதைய அரசு செயல்படுத்தி வருகிறது. தற்போதைய அரசு மக்களுக்கு நன்மை பயக்கும் விதமாக புதிய திட்டங்களை இதுவரை கொண்டு வரவில்லை.

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் நிர்வாகக் குறைபாடுகள் அதிகரித்து வருகின்றன. சாலைகள் சேதமடைந்துள்ளன. மழைக்காலம் நெருங்கியும் அவற்றை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. லஞ்சம், ஊழல் இருக்காது என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், தற்போது பல்வேறு முறைகேடுகளில் சிக்கியுள்ளனர். 1984 சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெறவில்லை என்றாலும், அதன் பின்னர் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பாலான இடங்களில் திமுக வெற்றி பெற்றது.

இன்னும் 6 மாதங்களில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக நிச்சயம் வெற்றி பெறும். திமுக தலைவரை சாதாரன தொண்டரும் எளிதில் அணுகக்கூடியவர். ஆனால் தற்போதைய முதலமைச்சரை பொதுமக்கள் எளிதில் சந்திக்க முடியாத நிலை உள்ளது. இவ்வாறு பேசினார். இந்நிகழ்ச்சியில், திமுக மாநில துணை அமைப்பு செயலாளர் தாயகம் கவி, முன்னாள் எம்எல்ஏ எபினேசர், மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் நரேந்திரன், திமுக வழக்கறிஞர் கவி கணேசன், பகுதி செயலாளர் லட்சுமணன், வட்டச் செயலாளர்கள், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: