திருவண்ணாமலையில் திருவூடல் திருவிழா; அண்ணாமலையார் கோயிலில் மறுவூடல் விழா: பக்தர்களின்றி நடந்தது

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் முழு ஊரடங்கு எதிரொலியாக அண்ணாமலையார் கோயிலில் மறுவூடல் நிகழ்ச்சி பக்தர்கள் இன்றி நடைபெற்றது. இதில் ராஜ அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளி அருள்பாலித்தார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆண்டுதோறும் தை மாதம் 2ம்தேதி பிரசித்தி பெற்ற திருவூடல் திருவிழா நடைபெறுவது வழக்கம். அண்ணாமலையாருக்கும் உண்ணாமுலையம்மனுக்கும் இடையே ஏற்படும் ஊடலையும், கூடலையும் விளக்கும் வகையில் இத்திருவிழா நடத்தப்படுகிறது.

அதன்படி நேற்று முன்தினம் திருவூடல் தெருவில் திருவூடல் திருவிழா நடைபெற்றது. கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக மாலையில் நடைபெற வேண்டிய திருவூடல் நேற்று முன்தினம் மதியம் நடைபெற்றது. வழக்கமாக திருவூடல் திருவிழாவிற்கு அடுத்த நாள் அண்ணாமலையார் கிரிவலம் சென்று பக்தர்களுக்கு அருள்பாலிப்பதும், கிரிவலப்பாதையில் ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்து சுவாமி தரிசனம் செய்வதும் வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கொரோனா தொற்று பரவலால் திருவூடல் நடைபெற்ற நேற்றுமுன்தினம் மதியமே அண்ணாமலையார் கிரிவலம் சென்றார். கிரிவலப்பாதையில் பக்தர்கள் தரிசிக்க அனுமதிக்கப்படவில்லை.

இந்நிலையில் திருவூடல் திருவிழா நிறைவடைந்ததையடுத்து, சுவாமிக்கும், அம்மனுக்கும் இடையே ஏற்பட்ட ஊடல் தீர்ந்ததற்கான மறுவூடல் நிகழ்ச்சி நேற்று அண்ணாமலையார் கோயில் 2ம் பிரகாரத்தில் நடந்தது. இதில் ராஜ அலங்காரத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் எழுந்தருளினார். இந்த விழாக்களில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக பக்தர் அனுமதிக்கப்படவில்லை. தீபமலையை அண்ணாமலையாரே கிரிவலம் செல்லும் நிகழ்வு வருடத்திற்கு 2 முறை மட்டுமே நடைபெறும். அதன்படி கார்த்திகை தீபம் முடிந்த மறுதினமும், திருவூடல் திருவிழா முடிந்த மறுதினமும் சுவாமி கிரிவலம் நடைபெறுவது வழக்கம்.

Related Stories: