பேரணாம்பட்டு அருகே அனுமதியின்றி நடந்த காளைவிடும் விழாவில் மாடு குத்தி சிறுவன் பலி : நெற்குப்பை மஞ்சுவிரட்டில் மாணவன் உயிரிழப்பு

பேரணாம்பட்டு அருகே காளைவிடும் விழாவில் மாடு முட்டி சிறுவனும், சிவகங்கை மாவட்டம், நெற்குப்பை மஞ்சுவிரட்டில் மாணவனும் உயிரிழந்தனர். வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த கள்ளிசேரி கிராமத்தில் நேற்று முன்தினம்  அனுமதியின்றி காளைவிடும் விழா நடத்தப்பட்டது. இதில் குடியாத்தம், பேரணாம்பட்டு மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆம்பூர் உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளில் இருந்தும் ஏராளமான காளைகள் பங்கேற்றன. இதனை காண ஏராளமான இளைஞர்கள், சிறுவர்கள் குவிந்தனர்.

பேரணாம்பட்டு எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்த சங்கர் என்பவரது மகன் கிருஷ்ணன்(13), அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார். இவர் தனது நண்பர்களுடன் காளைவிடும் விழாவை காண சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக பார்வையாளர்கள் மீது சீறிப்பாய்ந்த மாடு அங்கு நின்றிருந்த கிருஷ்ணனின் வயிற்றில் குத்திவிட்டு ஓடியது.  

நண்பர்கள் மற்றும் விழாகுழுவினர்கள், படுகாயமடைந்த கிருஷ்ணனை மீட்டு பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மதியம் பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்து பேரணாம்பட்டு போலீசார் வழக்குப்பதிந்து அனுமதியின்றி காளைவிடும் விழா நடத்திய விழாக்குழுவினர் சக்கரை(49), சுரவேல்(47), வேதாச்சலம்(42), லோகநாதன்(47) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

மஞ்சுவிரட்டு: சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் தாலுகா நெற்குப்பையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் பாரம்பரிய மஞ்சுவிரட்டு நடைபெறுவது வழக்கம். நேற்று முன்தினம் இந்த ஆண்டிற்கான மஞ்சுவிரட்டு நடைபெற்றது. அப்போது மஞ்சுவிரட்டை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்த பார்வையாளர்கள் கூட்டத்திற்குள் எதிர்பாராதவிதமாக மாடு புகுந்து சிலரை குத்தியது. இதில் கொண்ணத்தான்பட்டியைச் சேர்ந்த பரமசிவம் மகன் பிளஸ் 1 மாணவர் பாலாஜி (16), மாடு முட்டியதில் படுகாயமடைந்தார்.

உடனடியாக பொன்னமராவதி அரசு மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர். அங்கு  பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே பாலாஜி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

Related Stories: