புத்தாண்டிற்குபின் தொற்று கிடுகிடு உயர்வு: புதுச்சேரியில் கொரோனா கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படுமா?

புதுச்சேரி: நாடு முழுவதும் ஒமிக்ரான் மற்றும் கொரோனா தொற்று பரவல் தற்போது அதிகரித்து வருகின்றது. கடந்த கொரோனா 2வது அலையின்போது உயிரிழப்பில் நாட்டில் 2ம் இடத்தை பிடித்த புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 2022 புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியது. திரைப்பட நடிகை சன்னி லியோன் நடனநிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் நீதிமன்ற தடையால் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. புத்தாண்டில் கிடைக்கும் மது விற்பனை மூலம் கிடைக்கும் வருமானத்தை கொண்டே புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கான சம்பளத்தை போடக் கூடிய நிலையில் அரசு இருப்பதாக நீதிமன்றத்தில் அரசின் வழக்கறிஞரே முறையிட்டது பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்தது.

இதனிடையே புத்தாண்டு கொண்டாட்டத்திற்குபின் புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த வாரம் 100க்கும் கீழ் இருந்த பாதிப்பு தற்போது 1500ஐ எட்டியுள்ளது. தைப் பொங்கலன்று 2,344 பேரை பரிசோதித்ததில் 1,213 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 51 சதவீதத்திற்கும் மேல் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இந்திய அளவில் புதுச்சேரி முதல் இடத்தில் இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு காய்ச்சல், சளி, இருமல், தலைவலி, உடல்வலி உள்ளிட்ட நோய்களுடன் வரும் நோயாளிகளின் தினசரி எண்ணிக்கையும் அதிகரித்துள்ளன.

இதன் காரணமாக மாநில சுகாதாரத்துறை கொரோனா 3ம் அலை குறித்த விழிப்புணர்வு எச்சரிக்கையை நகராட்சிகள், கொம்யூன்கள் மூலமாக நகரம், கிராமப்புறங்களில் வீதி வீதியாக ஒலிபெருக்கி வாயிலாக மக்களுக்கு தெரிவிக்கும் பணிகளை முடுக்கி விட்டுள்ளன. ஒருபுறம் புத்தாண்டு கொண்டாட்டம், ெபாங்கலுக்கு சுற்றுலா இடங்களுக்கு தடையில்லை என கொரோனா சமூக பரவலுக்கான கதவு திறந்து விடப்பட்டுள்ள நிலையில் மற்றொருபுறம் உள்ளூர் மக்கள் கட்டுப்பாடுகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டுமென அறிவுறுத்தப்படுவது பொதுமக்களிடையே முணுமுணுப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரியை ஒட்டியுள்ள தமிழகத்தில் திமுக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மத்திய அரசின் அறிவுறுத்தலுக்கிணங்க கடுமையாக விதித்து வருகிறது. அங்கு இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், பண்டிகை நாட்களில் சுற்றுலா தலங்கள், கடற்கரையில் குவிய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் வழிபாட்டு தலங்களுக்கு பொதுமக்கள் செல்ல தடை போடப்பட்டுள்ளது. மக்கள் அதிகளவில் கூடும் சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளன.

ஆனால் புதுச்சேரியில் பெயரளவில் தியேட்டரில் 50 சதவீத இருக்கை, பஸ்களில் 50 சதவீதம் பேர் பயணிக்க வேண்டுமென உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதோடு சரி. மாநில எல்லைகளிலும் கடந்த ஆண்டுகளை போல் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதில்லை. மாறாக தேவைப்படும் நேரத்தில் காவல்துறையும், சுகாதாரத்துறையும் பெயளரவில் தடுப்பூசி சோதனையை மட்டும் நடத்தி விட்டு திரும்பி விடுகின்றனர். இதனால் தற்போது வரை கர்நாடகா, கேரளா, ஆந்திரா, டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த வாகனங்களை சுற்றுலா தலங்களில் அதிகளவில் காணமுடிகிறது. இதேபோல் வடமாநிலத்தவரின் நடமாட்டமும் முன்பை காட்டிலும் அதிகம் உள்ளது.

கொரோனா தடுப்பூசி கட்டாயம் என்று மாநில சுகாதாரத்துறை சட்டத்தை இயற்றி அதை நடைமுறைப்படுத்த பல்வேறு முனைப்பு காட்டிவரும் நிலையில், முன்னெச்சரிக்கை கட்டுப்பாடுகளை இப்போதே கடுமையாக்க வேண்டும். இல்லாவிடில் கடந்தாண்டு மார்ச், ஏப்ரல், மே மாதத்தில் சந்தித்த பாதிப்பு, உயிரிழப்புகளைவிட இந்தாண்டு மேலும் அதிகளவில் சந்திக்க வேண்டிய அவலம் ஏற்பட்டு விடும். எனவே தமிழகத்தை பின்பற்றி முழு ஊரடங்கு, இரவுநேர ஊரடங்கு, சுற்றுலா மையங்கள், வழிபாட்டு தலங்கள் மூடல் உள்ளிட்ட மக்கள் அதிகளவில் கூடும் நிகழ்வுகளை தடை செய்து நோய் சமூக பரவலை கட்டுப்படுத்த வேண்டுமென கோரிக்கைகள் வலுத்துள்ளன. அரசும், சுகாதாரத்துறையும் காலத்தோடு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related Stories: