ராஜ்யசபா எம்பி ஆகிறாரா? ஆந்திர முதல்வருடன் சிரஞ்சீவி சந்திப்பு

சென்னை : ஆந்திர மாநில முதல்வரும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டியை தெலுங்கு முன்னணி நடிகர் சிரஞ்சீவி திடீரென்று சந்தித்துப் பேசினார். அப்போது ஜெகன் மோகன் ரெட்டி சிரஞ்சீவிக்கு மதிய விருந்து அளித்தார். இந்த சந்திப்பில், ஆந்திராவில் சினிமா டிக்கெட் விலை குறித்த சர்ச்சை குறித்து பேசியதாக கூறப்படுகிறது. ஆனால் ஜெகன் மோகன் ரெட்டியும், சிரஞ்சீவியும் நெருக்கமான நண்பர்கள். அதனால், சிரஞ்சீவிக்கு ராஜ்யசபா எம்பி சீட் வழங்க ஜெகன் மோகன்  ரெட்டி முடிவு செய்திருப்பதாகவும், அதற்காகவே இந்த சந்திப்பு நடந்ததாகவும் கூறப்படுகிறது.

வரும் ஜூன் மாதம் ஆந்திராவில் 4 ராஜ்யசபா எம்பிக்களின் பதவிக்காலம் முடிவடைகிறது. தற்போதுள்ள சட்டசபை எம்எல்ஏக்கள் பலத்தின் அடிப்படையில் ஜெகன் மோகன் ரெட்டி கட்சி 4 சீட்டுகளையும் வெல்லும் என்று தெரிகிறது. அதில் ஒரு சீட்டை சிரஞ்சீவிக்கு கொடுக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

மீண்டும் அரசியலுக்கு வர மாட்டேன்

இத்தகவல் குறித்து சிரஞ்சீவி தனது டிவிட்டரில் வெளியிட்ட பதிவில், ‘ெதலுங்கு படவுலகின் முன்னேற்றத்துக்காகவும், திரையரங்குகளின்  எதிர்கால வாழ்க்கைக்காகவும் ஆந்திர முதல்வரை நேரில் சந்தித்துப் பேசினேன். சிலர் இதை அரசியலாக்கி, என்னை ராஜ்யசபாவுக்கு அனுப்புவதற்காகவே இந்த சந்திப்பு நடந்ததாக தவறான தகவலை பரப்பி வருகின்றனர்.

இது முற்றிலும் ஆதாரமற்றது’ என்று தெரிவித்துள்ளார். மேலும் சிரஞ்சீவி கூறுகையில், ‘நான் மீண்டும் அரசியலுக்கும், சட்டமன்றத்துக்கும் வர மாட்டேன். தயவுசெய்து யூகங்களை செய்தியாக ஒளிபரப்ப வேண்டாம். இதுபோன்ற செய்திகளுக்கும், விவாதங்களுக்கும் இப்போதைக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: