தென் ஆப்ரிக்காவுக்கு 212 ரன் இலக்கு: ரிஷப் பன்ட் அபார சதம்

கேப் டவுன்: இந்திய அணியுடனான 3வது மற்றும் கடைசி டெஸ்டில், தென் ஆப்ரிக்க அணிக்கு 212 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்திய அணியின் 2வது இன்னிங்சில் அபாரமாக விளையாடிய ரிஷப் பன்ட் அதிரடி சதம் விளாசி அசத்தினார். நியூலேண்ட்ஸ் மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா 223 ரன், தென் ஆப்ரிக்கா 210 ரன் எடுத்து ஆல் அவுட்டாகின. இதைத் தொடர்ந்து, 13 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா, 2ம் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 57 ரன் எடுத்திருந்தது.

தொடக்க வீரர்கள் மயாங்க் அகர்வால் 7 ரன், கே.எல்.ராகுல் 10 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். புஜாரா 9 ரன், கேப்டன் கோஹ்லி 14 ரன்னுடன் நேற்று 3வது நாள் ஆட்டத்தை தொடங்கினர். புஜாரா மேற்கொண்டு ரன் ஏதும் எடுக்காமல் ஜான்சென் பந்துவீச்சில் பீட்டர்சென் வசம் பிடிபட்டார். அடுத்து வந்த ரகானே 1 ரன் மட்டுமே எடுத்து ரபாடா வேகத்தில் விக்கெட்டை பறிகொடுக்க, இந்தியா 19 ஓவரில் 58 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து திணறியது.

இந்த நிலையில், கேப்டன் கோஹ்லியுடன் இணைந்த ரிஷப் பன்ட் நம்பிக்கையுடன் அடித்து விளையாடி ஸ்கோரை உயர்த்தினார். மறு முனையில் கோஹ்லி மிக மிக நிதானமாக விளையாடி கம்பெனி கொடுத்தார். இந்த ஜோடி 5வது விக்கெட்டுக்கு 94 ரன் சேர்த்தது. கோஹ்லி 29 ரன் எடுத்து (143 பந்து, 4 பவுண்டரி) லுங்கி என்ஜிடி வேகத்தில் மார்க்ரம் வசம் பிடிபட்டார். அடுத்து வந்த அஷ்வின் 7, ஷர்துல் 5 ரன்னில் வெளியேற, உமேஷ் யாதவ் மற்றும் முகமது ஷமி டக் அவுட்டாகி அணிவகுத்தனர்.

சக வீரர்கள் சொதப்பினாலும், அதிரடியை தொடர்ந்த ரிஷப் பன்ட் டெஸ்ட் போட்டிகளில் தனது 4வது சதத்தை பதிவு செய்தார். ஜஸ்பிரித் பும்ரா 2 ரன் எடுத்து ஜாம்சென் பந்துவீச்சில் பவுமா வசம் பிடிபட, இந்தியா 2வது இன்னிங்சில் 198 ரன்னுக்கு ஆல் அவுட்டானது (67.3 ஓவர்). பன்ட் 100 ரன்னுடன் (139 பந்து, 6 பவுண்டரி, 4 சிக்சர்) இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்திய இன்னிங்சில், 3வது அதிகபட்ச ஸ்கோர் உதிரியாக கிடைத்த 28 ரன் தான் என்பது குறிப்பிடத்தக்கது. தென் ஆப்ரிக்க பந்துவீச்சில் மார்கோ ஜான்சென் 4, காகிசோ ரபாடா, லுங்கி என்ஜிடி தலா 3 விக்கெட் கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து, 212 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்ரிக்கா 2வது இன்னிங்சை தொடங்கி விளையாடியது.

Related Stories: