பொங்கல் பண்டிகை மற்றும் தைப்பூசத்திற்கு கோவில்கள் மூடல்: வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என பூ வியாபாரிகள் வேதனை

சென்னை: பொங்கல் பண்டிகை மற்றும் தைப்பூசத்தை ஒட்டி 5 நாட்களுக்கு கோவில்கள் மூடப்படுவதால் தங்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என பூ வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் அவர்கள், இந்த தொழிலை நம்பி தான் தங்களின் வாழ்க்கை உள்ளதாகவும், தலைமுறை தலைமுறையாக நடத்திவரும் இத்தொழிலில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டதுடன், குடும்பமும் வறுமையில் வாடுவதாகவும் வேதனை  தெரிவிக்கின்றனர்.

ஏற்கெனவே 3 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், தற்போது தொடர் ஊரடங்கு போடப்பட்டால் தங்களின் வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்பட்டுவிடும் எனவும், மதுபான கடைகளுக்கு அனுமதி வழங்கிவிட்டு கோவில்களை மூட சொல்வது மிகுந்த வேதனையளிக்கிறது எனவும் கூறுகின்றனர்.

கோவில் வாசலில் விற்பனை செய்து கொண்டிருந்த பூ வியாபாரிகள் பலரை வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டதால் வியாபாரம் சரிவர இல்லை என்றும்,  ஆண்டதோறும் கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில் கொரோனா காலத்தில் அதனை தடை செய்த நிலையில் பூ வியாபாரம் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது என்றும் அவர்கள்  கூறுகின்றனர். இதற்கு தமிழக அரசு ஏதேனும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பூ வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.         

Related Stories: