லாதம் இரட்டை சதம்; வலுவான நிலையில் நியூசிலாந்து: 126 ரன்னில் சுருண்ட வங்கம்

கிறைஸ்ட்சர்ச்: நியூசிலாந்து-வங்கதேசம் இடையிலான 2வது டெஸ்ட் ஆட்டம்  நியூசியின் கிறைஸ்ட்சர்ச் நகரில் நடக்கிறது. முதல்நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 90ஓவருக்கு ஒரு விக்கெட் மட்டும் இழந்து 349ரன் குவித்திருந்தது.   களத்தில் இருந்த கேப்டன் டாம் லாதம் 184*, டெவன் கான்வே 99* ரன்னுடன் 2வது நாளான  நேற்று முதல் இன்னிங்சை தொடர்ந்தனர். முதல் பந்திலேயே பவுண்டரி விளாசிய கான்வே தனது 3வது டெஸ்ட் சதத்தை(166பந்துகள், 12பவுண்டரி, 1 சிக்சர்) பூர்த்தி செய்தார். தொடர்ந்து 109ரன் எடுத்திருந்த போது அவரை,  மெகிதி ரன் அவுட் செய்தார். தொடர்ந்து வந்த ராஸ் டெய்லர் 28 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இடையில்  லாதம்  பவுண்டரியுடன் தனது 2வது இரட்டை சதத்தை விளாசினார்.  சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த  லாதம் 126 ஓவரிரை வீசிய கேப்டன் மொமினுல்லின்  முதல் 3 பந்துகளை எல்லைக்கு விரட்டி 6, 4, 6 ரன் விளாசி 250ரன்னை கடந்தார். ஆனால் 4வது பந்தில் லாதம் ஆட்டமிழந்தார். அப்போது அவர் 252ரன்(373பந்து, 34பவுண்டரி, 2 சிக்சர்) குவித்திருந்தார்.

அடுத்த சில ஓவர்களில் நியூசி டிக்ளேர் செய்த போது அந்த அணி 128.5ஓவருக்கு 6 விக்கெட்களை இழந்து 521குவித்து வலுவான நிலையில் இருந்தது.  பிளெண்டெல் 57*, ஜேமிசன் 4*ரன்னுடன் களத்தில் இருந்தனர். வங்கதேசம் தரப்பில்  ஷோரிபுல், எபதாத் ஆகியோர் தலா 2,  மொமினுல் ஒருவிக்கெட் எடுத்தனர்.

தொடர்ந்து  வங்கதேசம் முதல் இன்னிங்சை  தொடங்கியது. நியூசி  வீரர்களின் வேகத்தை சமாளிக்க முடியாமல் திணறிய வங்க வீரரர்கள் அடுத்தடுத்து  பெவிலியன் திரும்பினர்.  இடையில் தனது முதல் அரை சதத்தை விளாசிய யாசிர் அலி  55, நூருல் ஹசன் 41ரன்   குவித்து  கொஞ்சம் ஸ்கோர் உயர உதவினர். அடுத்து வந்தவர்களும்  வெளியேற வங்கதேசம் 41.2ஓவரில் 126ரன்னுக்கு ஆட்டமிழந்தது. நியூசி தரப்பில் போல்ட் 5, சவுத்தீ 3,  ஜேமிசன் 2 விக்கெட் அள்ளினர்.

அத்துடன் 2வது நாள்  ஆட்டம்  முடிவுக்கு வந்தது. முதல் இன்னிங்சில் நியூசி 395ரன் முன்னிலை பெற்றுள்ளது. அதனால் 3வது நாளான இன்று  நியூசி 2வது இன்னிங்சை தொடருமா, இல்லை வங்கத்துக்கு ‘பாலோ ஆன்’ தருமா என்பது தெரிய வரும்.

டெய்லருக்கு வரவேற்பு

வங்கதேசத்துக்கு எதிரான தொடருடன்  ஓய்வு பெறுவதாக ராஸ் டெய்லர் அறிவித்துள்ளார். அதனால் டெய்லர் தனது கடைசி டெஸ்ட் ஆட்டத்தில் நேற்று களமிறங்கினார். அப்போது வங்கதேச வீரர்கள் வரிசையில் நின்று  கைதட்டி அவரை வரவேற்றனர்.

*போல்ட் 300

நியூசி வீரர் டிரென்ட் போல்ட் நேற்று  மெகிதி ஹசன் விக்கெட் வீழ்த்திய போது 300விக்கெட்(75டெஸ்ட்) எடுத்த பந்து வீச்சாளர்கள் பட்டியலில் இணைந்தார். மேலும் அவர் 9 வது முறையாக தலா 5 விக்கெட்களை அள்ளியுள்ளார்.

Related Stories: